மரியாதை என்றதும் பதற வேண்டாம். மரியாதை என்பதற்கு சமூகம் ஏகப்பட்ட அர்த்தங்களை வைத்திருக்கிறது. சிலருக்கு சாஷ்டாங்கமாய்க் காலில் விழுவது தான் மரியாதை. சிலருக்கு ஒரு சின்னப் புன்னகை கூட மரியாதை தான். சிலருக்கு வார்த்தைகள், சிலருக்கு வணக்கம், சிலருக்கு சின்னச் சின்ன செயல்களின் வெளிப்பாடுகள். மரியாதை என்பது மனித இனத்தின் தனித் தன்மை. அது கணவன் மனைவியரிடேயும் இருக்க வேண்டியது முக்கியம்.
அதற்காக ஏதோ ஐயா, அம்மா என்று அழைத்து மரியாதை செய்ய வேணுமா என டென்ஷனாகாதீர்கள். பொதுவாகவே திருமணம் முடிந்தவுடன் கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் வாழ்க்கையைத் துவங்குவார்கள். அப்புறம் இவர் தனக்கானவர்,, இவள் தனக்கானவள் எனும் எண்ணம் மனதுக்குள் ஆழமாகப் பதிந்து விடும். இது நல்ல விஷயம் தான். ஒரே ஒரு சிக்கலைத் தவிர. அதாவது கணவனோ மனைவியோ என்னதான் செய்தாலும், “இது அவருடைய கடமை”, “இது அவளுடைய கடமை” என மனம் நினைக்கத் துவங்கி விடுவது தான்.
அந்த சிந்தனை மனதில் இருக்கும்போ ஒரு செயலுக்கான மரியாதையைக் கொடுக்க நினைக்க மாட்டோம். அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள். ஒரு பாராட்டோ, அங்கீகாரமோ, செயலுக்கான மரியாதையோ கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள் ? மரியாதை தெரியாத மனுஷங்க கூட மாரடிக்க வேண்டியிருக்கு என புலம்புவீர்கள் தானே ! ஒரு ஆராய்ச்சி முடிவு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. ஏன் மக்கள் அடிக்கடி தங்களுடைய வேலையை மாற்றிக் கொள்கிறார்கள் ? என்பது தான் ஆய்வுத் தலைப்பு. நல்ல பணம் கிடைக்கிறதனால வேலையை மாற்றுவது தான் நமக்குத் தோன்றும் பதில். உண்மை அப்படியில்லையாம். “செய்ற வேலைக்கான மரியாதை கிடைக்கல” என்பது தான் முக்கியமான காரணமாம் !
அத்தகைய சிந்தனை உறவுகளிடையேயும் நிச்சயம் எழத் தான் செய்யும். மென்மையாக ! உங்களுடைய சட்டையை ஒரு நாள் உங்கள் நண்பனோ, சகோதரனோ அயர்ண் பண்ணிக் கொடுத்தால் ரொம்ப நன்றி சொல்கிறீர்கள். அதே வேலையைத் தினமும் உங்கள் மனைவி செய்தாலும் நீங்கள் நன்றி சொல்லாமல், அல்லது அதை “மனைவி செய்ய வேண்டிய கடமை” போல நினைத்துக் கொள்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அங்கே தான் இந்த சிக்கலின் முதல் சுவடு பதிகிறது. அதற்காக அலுவலகத்தில் சொல்வது போல “டியர் மனைவி” என ஆரம்பித்து ஒரு நீளமான மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய அவசியமில்லை. ஒரு புன்னகை, ஒரு அரவணைப்பு, ஒரு நன்றி வார்த்தை, ஒரு பாராட்டு.. இப்படி சின்னச் சின்ன விஷயம் தான் ! அதைக் கவனமுடன் செய்ய ஆரம்பிப்பதில் இருக்கிறது வாழ்க்கையின் வெற்றி !
வார்த்தைகளை விட, நமது செயல்களில், நமது நடவடிக்கைகளில் அந்த மரியாதை வெளிப்படுவது இன்னும் அதிக பயன் தரும். உதாரணமாக, மனைவி சமையல் செய்து வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமையலுக்கான மரியாதை என்ன தெரியுமா ? ஆர்வத்துடனும், பொறுமையுடனும் அதை ருசித்துச் சாப்பிடுவது தான். ஹோட்டலுக்குச் செல்லும் போது உணவுகளின் ருசியைப் பாருங்கள். விலையைப் பாருங்கள். இல்லங்களில் சாப்பிடும்போது சாப்பாடு தயாரித்தவரின் மனதையும், உழைப்பையும், அன்பையும் பாருங்கள். அதுவே முக்கியமானது ! உப்பு இல்லை, காரம் இல்லை என்று சொல்லி உணவை நிராகரிப்பவர்களும், விலக்கி வைப்பவர்களும் அதிகபட்ச அவமரியாதையைச் செய்கிறார்கள் !
இன்னொரு முக்கியமான விஷயம் பேச்சு ! மரியாதை இல்லாத பேச்சு ரொம்ப ரொம்பத் தப்பு. குறிப்பாக பிறர் முன்னிலையில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது ஒருமையில் அழைத்துப் பேசுவது, அதிகாரத் தொனியில் பேசுவது, எரிச்சலுடன் பேசுவது, இளக்காரமாய்ப் பேசுவது, மரியாதை குறைவாய் பேசுவது போன்றவையெல்லாம் ரொம்பவே தவறான விஷயங்கள். கணவன் தானே, மனைவி தானே என நீங்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால் அவர்களும் இந்தச் சமூகத்தில் ஒரு தனி மனிதர், அவருக்கும் உணர்வுகள், சுயமரியாதை உண்டு என்பதை மனதில் கொண்டிருங்கள்.
ஒரு விஷயத்தை முடிவு செய்து விட்டு உங்கள் வாழ்க்கைத் துணையிடம் சொல்வதற்கும், வாழ்க்கைத் துணையுடன் இணைந்து பேசி ஒரு விஷயத்தை முடிவு செய்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ‘ஆமா, எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு சொல்ல வந்துட்டாங்க” எனும் சலிப்பு உறவுக்கு நல்லதல்ல. வெறும் தகவல் சொல்லும் ஒரு மனிதராகவோ, உங்கள் கட்டளைகளை ஏற்று நடக்கும் ஒரு மனிதராகவோ மட்டும் அவரைப் பார்க்கவே பார்க்காதீர்கள். அது அவரை அவமரியாதை செய்வதற்குச் சமம். இருவரும் சேர்ந்து ஒரு விஷயத்தைப் பேசி முடிவெடுப்பதே நல்லது.
கிராமப் புறங்களில் வசிப்பவர்களுக்குத் தெரியும். ராத்திரி முழுக்க குடித்து விட்டுச் சண்டை போடும் கணவனைக் கூட விட்டுக் கொடுக்காமல் பேசுவாள் மனைவி. வீட்டில் எப்போதுமே அடங்காப் பிடாரியாய் பிடரி சிலிர்க்கும் மனைவியைக் கூட பொது இடத்தில் அன்பானவள் என பறைசாற்றுவான் கணவன். வேறு யாரேனும் தனது வாழ்க்கைத் துணையை தரக்குறைவாய் பேச அனுமதிக்க மாட்டார்கள். இது ஒருவகையில் கணவன் மனைவியிடையே இருக்கின்ற மனவருத்தங்களைத் தாண்டி ஒருவரை மற்றவர் மதிக்கும் மனப்பான்மை என்று எடுத்துக் கொள்ளலாம்.
கணவன் மனைவியராய் இருந்தால் கூட ஒவ்வொருவருக்குமான சில தனித் தனி விருப்பங்கள் இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். பெரும்பாலான தம்பதியர் சண்டையிட்டுக்கொள்ளும் விஷயம் இது தான். அல்லது இது தான் மன வருத்தங்களை தோற்றுவிக்கும் ஒரு மிகப்பெரிய காரணியாய் இருக்கிறது. உதாரணமாக, உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஒரு குறிப்பிட்ட தலைவரைப் பிடிக்கலாம், நடிகரைப் பிடிக்கலாம், ஆன்மீக வழிகாட்டியைப் பிடிக்கலாம், அல்லது ஒரு ஸ்பெஷல் ஹாபி இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என அதற்கான அங்கீகாரத்தையும் மரியாதையையும் கொடுங்கள். உங்களுக்குப் பிடிக்கும் விஷயம் தான் உங்கள் கணவருக்கோ, மனைவிக்கோ பிடிக்க வேண்டும் என முரண்டு பிடிக்காதீர்கள். இருவருக்குமான தனிப்பட்ட சில விஷயங்கள் இருப்பதில் தவறில்லை. அது ஒட்டு மொத்த குடும்ப உறவைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே கவனிக்க வேண்டிய விஷயம்.
கண்ணை மூடிக்கொண்டு “இதெல்லாம் தப்புப்பா” என சொல்லும் ஒரு விஷயம் கை நீட்டி அடிப்பது, அல்லது மனம் காயப்படுத்தும் படி பேசுவது. ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்றெல்லாம் இல்லாமல் இதில் சமத்துவம் வீசுகிறது. கையால் அடிக்கும் அடி வலிப்பதில்ல்லை, ஆனால் அடித்துவிட்டாரே எனும் நினைப்பு தான் வலிகொடுக்கிறது. சொல்லும் சொல்லும் அப்படியே. என்னைப் புரிந்து கொண்ட இந்த மனுஷி இப்படிச் சொல்லிட்டாளே என்பது தான் வலிகொடுக்கும். அது உங்கள் வாழ்க்கைத் துணைக்கான மரியாதையை நீங்கள் தர மறுக்கின்ற தருணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம். நம்பிக்கை ! உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் தரமுடிந்த அதிகபட்ச மரியாதை அவரை முழுமையாய் நம்புவது. அதே போல, அந்த நம்பிக்கைக்கு உரியவராய் நீங்கள் இருப்பது பதில் மரியாதை ! இது மட்டும் அழுத்தமாய் இருந்தாலே போதும். வாழ்க்கை ஆனந்தமாய் ஓடும். நள்ளிரவில் வாழ்க்கைத் துணையின் செல்போனை நோண்டுவது, டைரியை புரட்டுவது, கணினியை ஆராய்வது போன்ற இத்யாதிகளெல்லாம் நீர்த்துப் போன நம்பிக்கையின் அடையாளங்கள்.
சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட நன்றி சொல்வது அடுத்தவர் செய்யும் விஷயங்களை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதன் அடையாளம். அது எலக்ட்ரிக் பில் கட்டுவதாக இருக்கலாம், உங்கள் துணியை அயர்ன் பண்ணுவதாக இருக்கலாம், ஒரு கப் காபி கொண்டு தருவதாகக் கூட இருக்கலாம். புன்னகையுடன் கூடின மனமார்ந்த நன்றி அந்தச் செயலை அர்த்தப்படுத்தும். புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன நன்றியெல்லாம் சொல்லிகிட்டு என்பதெல்லாம் பழைய பஞ்சாங்கம். நீங்கள் முயன்று பாருங்கள், மாற்றம் நிச்சயம் உங்களுக்கே தெரியும்.
விட்டுக் கொடுத்தல் கூட அடுத்த நபரையோ, அல்லது அந்த உறவையோ நீங்கள் மரியாதை செலுத்துகிறீர்கள் என்பதன் வெளிப்பாடு தான். ஒருவேளை உங்கள் மனைவி அவருடைய அம்மாவிடம் ரெண்டு மணி நேரம் போனில் பேசுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அப்படி என்னதான் பேசறீங்க ? என கேட்காமல் இருப்பது நல்லது. ஒருவேளை கேட்டு, உங்கள் மனைவி சொல்லத் தயங்கினால் அதை அப்படியே விட்டு விடுங்கள். துருவித் துருவி கேட்பதோ, வீணான அனுமானங்களுக்குள் இறங்கி உங்கள் தலையைக் குழப்பிக் கொள்வதோ தேவையற்ற விஷயம் !
“உங்கள் மனைவி ஏதாச்சும் ஒரு நல்ல முடிவெடுத்தா பாராட்டுங்க. தப்பான முடிவெடுத்தா சைலன்டா இருங்க” என்கிறார் ஒரு வல்லுநர். நல்ல முடிவுகளுக்குப் பாராட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தால், தப்பான முடிவு எடுக்கும்போ அவங்களுக்கே புரியும். ‘இந்த விஷயத்துக்குப் பாராட்டு வரல, அப்படின்னா இது சரியில்லை’ என அவருடைய உள்மனசே காட்டிக் கொடுக்கும். பாராட்டு என்பது மரியாதையின் ஒரு பகுதி என்பதை நான் சொல்லத் தேவையில்லை !
மரியாதை பரிமாறப்படாத இடங்களில் உறவுகள் நிலைப்பதில்லை. அலுவலகத்தில் போய் மரியாதை குறைவாய் ஒரு மாதம் நடந்து பாருங்கள். உங்களுடைய வேலையே போய் விடலாம். நண்பர் கூட்டத்தில் போய் மரியாதை வழங்காமல் ஒரு சில மாதங்கள் இருந்து பாருங்கள். நட்புகளெல்லாம் காணாமல் போய்விடும். உங்கள் சொந்தக்காரர் வீட்டுக்குப் போய் மரியாதை இல்லாமல் சில நாட்கள் தங்கிப் பாருங்கள், அந்த உறவு அதோடு முறிந்து போய்விடும். இப்படி எல்லா இடங்களிலும் மரியாதை கொடுப்பதும், வாங்குவதும் தேவைப்படும் போது, ஏன் குடும்பத்தில் மட்டும் அது தேவையற்ற ஒன்று என நினைக்கிறீர்கள் ?
இருக்கும் போது வாழ்க்கைத் துணையின் அருமை பெருமைகள் பலருக்கும் புரிவதில்லை. இழந்தபின் புலம்புவதில் பயனும் இல்லை. ” நீ இல்லேன்னா என்னால இதெல்லாம் சாதிச்சிருக்கவே முடியாது”, ” நீ இல்லேன்னா லைஃபே வெறுத்துப் போயிருக்கும்”, ” நீ எனக்குக் கிடைச்சது கடவுள் வரம்” என்றெல்லாம் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் என்றேனும் சொல்லியிருக்கிறீர்களா ? மனதிலாவது நினைத்திருக்கிறீர்களா ? ஏன் என்றாவது யோசித்திருக்கிறீர்களா ? அன்பாகப் பேசுங்கள். அன்பான பேச்சு வாழ்க்கையை ஆழப்படுத்தும் ! உங்கள் வாழ்க்கைத் துணைவருக்காக பிரார்த்தியுங்கள். அது உங்களுடைய அன்பின் வெளிப்பாடு.
கடைசியாக ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். மாற்றம் உங்களிடமிருந்து தான் துவங்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து துவங்கவேண்டும் என நினைப்பது நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான மரியாதையைக் கொடுக்கவில்லை என்பதன் அடையாளமே !
Source: http://sirippu.wordpress.com/2014/06/22/family_life3/ |