சமுதாயக் கட்டுக்கோப்பைப் பற்றிச் சொல்ல வந்த சிசேரோ (Cicero) “திருமணம்
சமுதாயக் கட்டுக்கோப்பின் ஆணிவேர்” என்றான். அன்று தொடங்கி இன்று வரை
திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் கடந்த இருபது
ஆண்டுகளில் இந்தியத் திருமணங்கள் வியக்கத்தக்க பல மாறுதல்களுக்கு
ஆளாகியிருக்கின்றன.
இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு நமது நடைமுறை வாழ்க்கையில்
ஏற்பட்டிருக்கும் மாறுதல்களுக்கு ஈடுகட்டக் கூடிய வகையிலே மக்களின்
மணவாழ்விலும் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. இளைய சமுதாயத்தினரின் எண்ணச்
சுழற்சியால் அவர்களது எதிர் பார்ப்புகள் மாறி வருகின்றன. உலகின் பல
பகுதிகளிலும் நாள்தோறும் நிகழ்கின்ற வியத்தகு நிகழ்ச்சிகளும்,
எழுச்சிகளும் அவர்களது சிந்தனை ஓட்டத்தை பாதிக்கின்றன.
தாங்கள் கற்ற கல்வியின் பயனாக விளைந்த கருத்துப் புரட்சிகள், பிற
நாட்டினர், பிற மொழியினர் போன்றவர்களது வாழ்க்கை முறைகளை அறிந்து
ஆராய்கின்ற போது நேர்கின்ற சிந்தனை மாற்றங்கள். இவை அனைத்தும் சேர்ந்து
அவர்கள் உள்ளத்திலே நவ நவமான கற்பனைகளைக் கனவுகளை, எதிர்பார்ப்புகளை
ஏற்படுத்துகின்றன.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் பெருத்த ஏமாற்றமே அவர்களை எதிர்
கொண்டழைக்கிறது. இளந்தலை முறையினரின் எதிர்பார்ப்புகளுக் கொப்ப முன்னேறாத
சமூக அமைப்பு, சாதிக்கட்டுப் பாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்,
வேலையின்மை, பெண்ணடிமை போன்ற பல அவலங்களை எதிர்த்துப் போராடச் சக்தியற்ற
நிலையில், பெற்றோரைக் காரணங்காட்டி சாதி, மதம், ஜாதகம், சடங்குகள்,
சம்பிரதாயம், வரதட்சிணை என்னும் சிக்கல்களுக்குள் தங்களைச் சிக்க வைத்துக்
கொள்கின்றனர். என்றாலும் அவர்களது நெஞ்சத்தின் அடித் தளத்தில் ஏமாற்றம்
என்னும் தீ கனன்று கொண்டே இருக்கிறது. இதன் விளைவுதான் அண்மைக் காலமாக
நிகழ்ந்து வருகின்ற மண முறிவுகள்.
இந்த மண முறிவுகள் அனைத்தும் அறிவார்ந்த நிலையில் நடைபெறுகின்றனவா என்று
ஆராய்கின்ற போது, சில மண முறிவு கள் அறிவு பூர்வமாகவும் பல மண முறிவுகள்
அச்சம், சினம், ஆத்திரம், ஏமாற்றம் போன்ற உணர்ச்சி மேலீட்டாலும்
நடைபெறுகின்றன என்ற உண்மை தெளிவாகும்.
நல்ல திருமணம் எப்படித் தோற்றுப் போ கும் என்ற கேள்விக்கு எளிதாக ஒரு விளக்கம் சொல்லவேண்டும்
என்றால் “வெளிப்பார்வைக்கு நல்லது போன்று தோன்றிய திருமணத்தின் உள்ளே சில
குறிப்பிடத்தக்க குற்றங்களும் குறை பாடுகளும் இருந்திருக்கக்கூடும்”
என்பதுதான். ஒரு மணமுறிவு அல்லது மணவிலக்கு (Divorce) நிகழ்கின்ற போது ஏதோ
பொருந்தாத திருமணம் போலும். அதனால் தான் முறிந்து விட்டது என்று எண்ணுவது
தான் நடை முறை வழக்கு.
ஆனால் எல்லா விதத்திலும் பொருத்த மாக இருந்த திருமணங்கள் கூட உடைந்து
போகின்றனவே. அது ஏன் சம்பந்தப் பட்டவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லை
மீறுவதே இதற்குக் காரணம். இந்த எல்லை மீறிய எதிர் பார்ப்புக்களினால் மண
வாழ்வில் மனக்குறை யும் அதிருப்தியும் ஏற்படலாம். அவற்றில் சில கற்பனை
கூடச் செய்து பார்க்க முடியாத அளவு கடுமையானவைகளாக இருக்கலாம், இது
போன்றமனக்குறைகள் எதனால் ஏற்படுகிறது. அதற்கான காரணங்கள் எவையெவை என்று
பார்ப்போம்.
1. தொடக்க காலத்தில் மனிதன்
திருமணம் என்ற பந்தத்திற்குள் தன்னைக் கொண்டு வந்தது பாதுகாப்பிற்காகவும்
அடிப்படை வசதிகளுக்காவும் மட்டுமே. பின்னாளில் இது பல தேவைகளையும் எதிர்
பார்ப்புகளையும் ஏற்படுத்தியது. கூடி மகிழவும் குழந்தைகளைப் பேணவும்
வேண்டுமென்ற எதிர்பார்ப்பிலிருந்து உயர்ந்து குடும்பவருவாயைப்
பெருக்கவும், குறையின்றிப் பழகவும், குறையின்றிப் பழகவும் வேண்டுமென
எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் அந்த எதிர்பார்ப்பு அறிவார்ந்த தோழமையாக (Intelectual
companionship) வும் உருமாற வேண்டுமெனக் கருதப்படுகிறது.
எதிர்பார்ப்புகளும் குறியீடுகளும் உயர்ந்து கொண்டே செல்கின்றபோது அதை
எட்டுவதும், இட்டு நிரப்புவதும் இயலாத ஒன்றாகி விடுகிறது. இது ஒரு காரணம்.
2. மணம் புரிந்து கொண்ட ஆணும் பெண்ணும் சமுதாயத்தின் கண்களுக்கு ஒரு
தொகுப்புப் போன்று தோற்றமளித்தாலும் உள்ளுக்குள், தாங்கள் இருவரும்
வெவ்வேறு தனித்துவம் (Indentity) உடையவர்கள் என்று
எண்ணத்தலைப்படுகின்றனர்.
பெண்களது உரிமைகள் பற்றிய உணர்வுகள் மிகுந்து வருகின்ற இந்த நாட்களில்
தானும் இந்தக் குடும்பத்தில் அலட்சியம் செய்ய முடியாத ஒரு அங்கம், இந்தக்
குடும்பத்தின் இயக்கத்திற்கு என்னுடைய வருமானமும்
அவசியம் என்னும் தன் முனைப்பு பெண்ணுக்குள் உருவாகத் தொடங்குகிறது.
மனைவி என்பவள் தன்னுடைய ஆளு கைக்கு உட்பட்டவள் என்ற நினைப்பு ஆண்டாண்டு
காலமாக ஆணின் உள்ளத்தில் ஊறிக்கிடக்கிறது. அதிலிருந்து வேறுபட்டுச்
சிந்திப்பதற்கு ஆணின் மனம் ஒப்புவதில்லை. தனக்குப் பணி விடை செய்வதும்,
தன் குழந்தைகளைப் பராமரிப்பதும், தன் தாய் தந்தையர்க்குச் சிசுருட்சை
செய்வதும், அவள் கடமை என்று எண்ணுகிறான், நம்புகிறான். அத்துடன் நில்லாமல்
அவள் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கவும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேறு
இன்று புதிதாகத் தோன்றியிருக்கிறது.
புதுமைப் பெண் என்று தங்களைக் கருதிக் கொள்ளாவிட்டாலும் பல பெண்களுக்கு
இதில் உடன்பாடில்லை. தங்களது சுயமதிப்பு பாதிக்கப்படுவதைத் தங்கள் முழு
பலத்துடன் அவர்கள் எதிர்க் கிறார்கள். இவர்களின் எண்ணங்களுக்கிடை யே
இருக்கின்ற இடைவெளி விரிவடைகின்ற போது மண விலக்கு ஒன்றே தீர்வாகிறது.
3. இன்றைய சூழலில் இளம் தம்பதியினரிடையே பாலுறவு பற்றிய
எதிர்பார்ப்புகளும் வளர்ந்து கொண்டே வருகின்றன. இதிலும் சிறுகச் சிறுகப்
பெண்ணின் ஆதிக்கம் உயர்ந்து வருகிறது. சமுதாய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற
வேண்டிய கட்டாயம் ஆணுக்கு ஏற்படுகிறது. அவ்வாறு நிறைவேற்ற இயலாத போது
தவிர்க்க முடியாத தாழ்வு மனப்பான்மை அவனை ஆட்கொள்கிறது. இருவரும் இணைந்து
அறிவார்ந்த முறையிலே இதற்குத் தீர்வு காண்பதை விடுத்து ஒருவரை மற்றவர்
குறை கூறத் தொடங்குகின்றனர். ஒரு மனநோய் மருத்துவர் அல்லது ஒரு உளவியல்
வல்லுநர் அல்லது ஒரு திருமண ஆலோசகர் போன்றவர்களை அணுகி இதற்கு மாற்றுத்
தேட முற்படாமல் மனமுடைந்து போகின்றனர்.
தோற்றுப்போகும் திருமணங்களில் இதுவும் ஒரு காரணம்.
4. இன்றைய நடைமுறையில் பெரும்பாலான ஆண்கள்தங்கள் மனைவியர்களும்
வேலைக்குச் செல்ல வேண்டுமென எண்ணுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் அதற்கேற்ற
பெருந்தன்மையும் நம்பிக்கையும் அவர்களிடம் இருப்பதில்லை. பணியின்
நிமித்தம் வெளியில் செல்லும் பெண்கள் பலருடன்பேசவும் பழகவும் வேண்டிய
கட்டாயத்திற்கு உட்படுகின்றனர்.அப்போது மனைவியின் உறவுகள் பற்றிக் கணவன்
கலவரமடைகிறான். அவளது அன்பை, நேர்மையைச் சந்தேகிக்கத் தொடங்குகிறான்.
அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தெரிந்தது போல்
எதற்கெடுத்தாலும் இடக்காகப் பேசத் தலைப்படுகிறான். இது இடைவிடாத
சச்சரவிலும் எல்லையில்லாத துன்பத்திலும் போய் முடிகிறது. இன்றைய மண
முறிவுகளின் முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று.ருக்குத் தங்கள்
தாம்பத்திய
வாழ்க்கை பற்றிப் பல கற்பனைகளும் கனவுகளும் இருக்கக்கூடும். தங்கள் கணவர்
அல்லது மனைவி தங்கள் கற்பனையில் தோன்றுகின்ற கதாநாயகன் அல்லது நாயகி போல்
நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அத்துடனின்றிப் பிற
தம்பதியர்கள் பலருடனும் புகழ்மிக்க திரைப்பட நடிகர் நடிகைகளுடனும் தங்களை
ஒப்பிட்டுக் கொண்டு தாங்கள் அது போல் இல்லையே என்று துயரப்படுவார்கள்.
எல்லோருடைய மண வாழ்விலும் ஏமாற்றங்கள் ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்பதை
இவர்கள் உணர்வதில்லை. மாறாகத் தங்கள் குடும்ப வாழ்க்கைதான் மிகவும் தரம்
குன்றிப் போய் விட்டதாக எண்ணித் தங்களை மிகவும் தாழ்வாக எடை போட்டுக்
கொள்வார்கள். தம்பதியர் இருவரில் ஒருவர் இது போன்று நினைத்து விட்டால்
வீடே நரகமாகி விடும். இது தவிர மணமுறிவிற்கு வேறு
காரணமும் வேண்டுமா ?
5. மணம் புரிந்து பல காலம் இன்பமாக வாழ்ந்தவர்கள் கூடச் சில வேளைகளில்
தங்கள் வாழ்வில் சுவை குன்றிவிட்டதென நினைக் கிறார்கள். இளமைக்காலத்தில்
தாங்கள் நடத்திய இனிய வாழ்வு போல் இன்று இல்லையே என்று அலுப்படைந்து
போகின்றனர்.
தன்னை மட்டும் பரிவுடன் கவனித்துப் பணிவிடை செய்து வந்த மனைவி இன்று
குழந்தை குட்டிகள் என்று வந்தவுடன் தங்களை விட்டு விலகிச் செல்கிறாள்
என்று இவர்கள் குற்றஞ்சாட்டுத் தொடங்குகின்றனர். இதுவே இவர்களுக்கு ஒரு
ஏமாற்றமாக அமைந்து விடுகிறது. இந்நிலையில் இவர்களை இனங்கண்டு கொண்டு,
திருத்த முயலும் மனைவியர்களுக்கு வெற்றி எளிதில் கிடைக்கிறது. மாறாக இது
போன்றதொரு மனநிலைக்குத் தன் கணவன் ஆட்பட்டி ருக்கிறான் என்பது கூடத்
தெரியாமல் கட்டுப்பொட்டியாக இருக்கின்ற சில பெண்கள் கடுமையான சோதனைகளுக்கு
ஆளாகின்றனர்.
பொதுவாகப் பொருத்தமான திருமண மானாலும் பொருந்தாத திருமணமானாலும் நிறைவேறாத
ஆசைகளைக் கணக்கில் கொண்டு எடை போடப் புகுவோமானால் எந்தத் திருமணமும்
ஈடுகொடுக்காது. மாறாக எல்லோருடைய மணவாழ்விலும் இன்பங் களும் துன்பங்களும்
ஏற்றத்தாழ்வுகளும் உண்டு. அவற்றை ஈடு செய்து கொண்டு போவதுதான் அறிவுடைமை
என்ற எண்ணம் உறுதியாகின்ற போது திருமணங்கள் தோற்றுப் போகமாட்டா. |