செல்போன், இளைய தலைமுறையினரிடம் பிரிக்க முடியாத உடலுறுப்பு போல ஒட்டிக் கொண்டிருக்கிறது. அவர்கள்
செல்போனால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு
செல்போன் வாங்கிக் கொடுக்கும்போதே அதனை `என்ன உபயோகத்திற்காக
பயன்படுத்துவாய்' என்று கேளுங்கள்.
வாங்கிக் கொடுத்தபிறகும் `எப்படி உபயோகப்படுத்துகிறாய்' என்று பார்க்கலாமா? என்று கேட்டு வாங்கிப் பாருங்கள்.
பல கேள்விகளை அவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்,
முன்பின் தெரியாதவர்கள் உனக்கு மெசேஜ் அனுப்பினால் என்ன செய்வாய்?
எவ்வளவு நம்பர் உன்னுடைய போனில் சேமித்து வைத்திருக்கிறாய். எல்லா
எண்களும் உனக்கு அறிமுகமானவர்களுடையதா, அவர்களை உனக்கு நன்றாகத் தெரியுமா?
யாராவது உனக்கு தேவையற்ற படங்களை அனுப்பினாலோ அல்லது உன்னை படம் பிடிக்க முயன்றாலோ என்ன செய்வாய்? அவர்களை எப்படி சமாளிப்பாய்?
இணையம் மற்றும் புளூடூத் இணைப்பு வழியாக உன்னை தவறாக தொடர்பு கொண்டால் என்ன செய்வாய்?
இந்தக் கேள்விகளை எல்லாம் எழுப்புங்கள். அவர்கள் கூறும் பதில்களுக்கு ஏற்ப அறிவுரை கூறுங்கள்.
அவர்கள் எப்போதெல்லாம், எவ்வளவு நேரம், யாருடன் பேசுகிறார்கள், பழகுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் வழிகளையும், அதைத் தவிர்க்க எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.
பெரும்பாலானவர்கள் விளக்கு அணைத்தபிறகு, தூங்க வேண்டிய நேரத்தில்
படுக்கையில் வைத்து செல்போனை உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் தூக்கம்
கெடுகிறது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம்
இருக்கிறது. எனவே செல்போன்களை படுக்கைக்குச் செல்லும்போது உபயோகிப்பதை தடை
செய்யுங்கள்.
ஆபாச எஸ்.எம்.எஸ். மற்றும் படங்கள் அனுப்பும் பழக்கத்தை தவிர்க்கச்
சொல்லுங்கள். அதுபோல ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் அவர்களின் செல்போனுக்கு வந்தால்
போலீசில் புகார் கொடுங்கள்.
சிலர் மிரட்டல் எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுப்பார்கள். அப்படி
எதும் வந்தால் அந்த எண்களில் இருந்து வரும் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களை
தடை செய்யுங்கள். முன்பின் தெரியாதவர்களின் தேவையற்ற அழைப்ப்புகளுக்கு
பதில் அளிப்பதையும் தவிர்க்கச் சொல்லுங்கள். |