இன்றுவரை 230 அயல்கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி
செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஜெப்ரி மார்சி என்பவர் தலைமையிலான அமெரிக்க
ஆராய்ச்சிக் குழு மட்டும் 150 கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கிறது. நமது
பால்வீதியில் மட்டும் 10 ஆயிரம் கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று ஜெப்ரி
மார்சி தெரிவித்திருக்கிறார். இதில் வியாழன் போன்ற வாயுக்கோள கிரகங்கள் 600
கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியைப் போன்று 10 லட்சம்
கிரகங்கள் இருக்கலாம் என்று டெப்ராபிசர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
தற்போது 5 கிரகங்களில் பூமியைப் போன்று தண்ணீர் இருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது. 50 கிரகங்களில் உயிரினம் இருக்க வாய்ப்பிருப்பதாகவும்
விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மெக்சிகோ அருகே விழுந்த ஒரு விண்கல்லில்
சர்க்கரைப் படிவு காணப்பட்டிருப்பதால், உயிரினம் உள்ள அயல்கிரகம்
இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அயல்கிரகங்களில் மனிதர்களைப் போன்ற அறிவுமிக்க உயிரினங்கள்
இருக்கின்றனவா? என்று கண்டுபிடிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி
வருகிறது. நமது பூமியின் கடலின் அடியில் உள்ள எரிமலைகளிலும், வடதுருவப்
பனிப் பிரதேசத்திலும், வறண்ட பாலைவனங்களிலும் ண்ணுயிரிகள் இருப்பதைப் போல,
விண்வெளியில் உள்ள அயல்கிரகங்களிலும் உயிரினங்கள் ஏற்கனவே தோன்றி வாழ்ந்து
கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டெப்ராபிசர் தெரிவித்துள்ளார்.
பூமிக்கு அருகில் உள்ள அயல்கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அதை 10
வருடங்களுக்குள் கண்டுபிடித்துவிடலாம் என்றும் அவர் நம்பிக்கை
தெரிவித்திருக்கிறார்.
பூமியில் இருந்து 44 ஒளிவருட தூரத்தில் உள்ள `உர்சா மேஜர்’ என்ற
நட்சத்திரத்தை ஒரு கிரகமானது, சூரியனை பூமி சுற்றிவரும் தூரத்தில் சுற்றிக்
கொண்டிருக்கிறது. அக்கிரகத்தில் தண்ணீரும், உயிரினங்களும் காணப்படுவதற்கு
வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். `இரவில் நான்
கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவற்றில் உயிரினங்கள்
இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது’ என்கிறார்,
டெப்ரா பிசர். |