உறவுகளையோ நட்புகளையோ சில சமயம் முடித்து
கொள்ளும் போது நமக்கு அதை மனம் புண்படுத்தாமல் அல்லது நோகடிக்காமல் செய்ய
தெரிவதில்லை. உறவை முடிந்த பின்னும் நாம் அதை பற்றி யாருடனாவது பேச
நேர்ந்தால் அதில் நம் மீது தவறே இல்லை என்பதை நியாயப்படுத்த காரணங்கள்
அடுக்குவதும் என்னைப்பொறுத்தவரை தேவை இல்லாத ஒன்று.
உறவுகள் முறிந்து போக இருவருக்கும் சரியான அலைவரிசை இல்லாதது காரணமாக இருக்கலாம். யார் மீதும் தவறு இருக்க வேண்டிய அவசியமே இல்லை.
நான் கவனித்தவரை பெற்றவர்கள் சில சமயம் குழந்தைகளிடம் ஒருவரை பற்றி தவறாக
பேசுவது அவர்கள் மனதில் தவறான எண்ணம் தோன்ற காரணமாகிறது. பெற்றவர்கள்
இடையே விவாதங்கள் நிகழ்வதில் தவறில்லை, அது ஒருவகையில் நல்ல ஆரோக்கியமான
மன நிலைக்கு காரணமாகிறது. குழந்தைகளுக்கு வயது வந்த இருவர்கள் அபிப்ராய
பேதங்கள் கொள்வதிலும் அதைப்பற்றி விவாதிப்பதிலும் தவறில்லை என்ற எண்ணத்தை
தரும்.இது ஆரோக்கியமான சூழலை தரும். கருத்து வேற்றுமை இருந்தாலும் நேசம்
கொள்வதில் தவறில்லை என்பதையும் காட்டும்.
ஆனால் அதுவே கோபமாகி கணவன் மனைவி இருவரும் ஒருவர் மீது இன்னொருவர்
காழ்ப்பு உணர்ச்சியை வெளியிட்டால், அது குழந்தைகள் மனதில் ஆழமாக
பதிந்துவிடும். பிறகு பெற்றோர்கள் சமாதானமாகி போனாலும் குழந்தைகளால் மறக்க
முடிவதில்லை.
சில வீடுகளில் மனைவையை தாழ்த்திப்பேசி, குழந்தைகளும் வளார்ந்தபினும்
அம்மாவிற்கு எதுவும் தெரியாது என்ற நினைப்பில் அவமதிக்கிறார்கள். சாதாரண
நடைமுறையில் இது பெரிதுபடுத்தப்படுவதில்லை. ஆனால் விவாகம் ரத்தானபின்,
குழந்தைகளை பகடைக்காய்களாக பயன் படுத்த தொடங்கும் போது குழந்தைகள் மனத்தை
அளவிட முடியாத அளவு காயப்படுத்துகிறது.
எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்றில், தந்தைக்கு சில நாட்கள் குழந்தைகளை
பார்த்துக்கொள்ளுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மனைவியிடம்
முறைகேடாக நடந்து கொண்டாலும், குழந்தைகளிடம் தவறாக நடந்ததாகவோ, மதுவிற்கோ,
போதைப்பொருளிற்கோ அடிமையானவன் என்றோ சட்டப்படி எந்தவித ஆவணங்களும்
இல்லாததால், குழந்தைகளின் தந்தை என்ற முறையில் இந்த உரிமையை யாரும் மறுக்க
முடியாது.
சின்ன குழந்தையின் மனதில் தந்தையை பற்றிய தவறான கருத்துக்கள்
வித்திடப்பட்டிருக்கிறது. ஆகையால் அடிப்படையில் ஆழ்ந்த வெறுப்பு
இருப்பதால், தந்தை வீட்டிற்கு செல்லும் குழந்தைகள் பயத்துடனேயே
போகிறார்கள். அங்கிருந்து வந்தவுடன் உடனேயே தந்தையை பற்றிய விவரங்களை
கேட்டு நச்சரிப்பதாலும், நாளடைவில் குழந்தைகள் யாருக்கு எது பிரியமோ அதை
சொல்லி தங்களை காப்பாற்றி கொள்ள விரும்புகிறார்கள்.
இரண்டு வீட்டில் மாறி மாறி இருபது குழந்தைகளுக்கு அதிக துன்பத்தை
தரக்கூடிய ஒரு விஷயமாகும். அதை கூடுமானவரையில் எளிமையாக்குவது சால
சிறந்தது. கணவன் மனைவி இருவரின் ego போராட்டத்தில் அடிக்கடி பள்ளி,
மருத்துவர்கள் இவர்களை மாற்றுவதும், உன்னைவிட என்னால் சிறப்பாக செய்ய
முடியும் என்று கண வனும், நான் மட்டும் என்ன குறைந்தா போய் விட்டேன் என்று
மனைவியும் போட்டியிடும் போது இடைப்பட்ட பிள்ளைகள் பாவம்
தவிக்கிறார்கள்.இதற்கிடையில் பெண்ணை பெற்றவர்கள் மகளின் கணவனை வசை பாட, கண
வனின் பெற்றவர்கள் மருமகளை வசை பாட, அதிக சினம் கொண்டவர்களாகவும் மனதில்
வேரூன்றிவிட்ட வெறுப்போடும் தவிப்பது குழந்தைகள்தான்.
இதுவே நான் மேற்சொன்ன குடும்பத்தில் 6 வயது குழ்ந்தையின் தற்கொலையில்
முடிந்திருக்கிறது. பள்ளி கவுன்சிலர் ஒரு வாரம் முன் பேசும் போது
எதைச்சையாக மாணவன் தான் இறக்க விரும்புவதாக சொல்ல, அவர் அன்னையை அழைத்து
பேசி இருக்கிறார். அம்மா மகனை அழைத்து, நான் படும் கஷ்டம் போதாதா, நீ வேறு
படுத்த வந்தாயா என்று சொல்லி அடிக்க, அப்பாவும் கண்டு கொள்ளாமல் விட, அதை
சாக்காக கொண்டு வழக்கறிஞரிடம், என் மனைவியே இதற்கு காரணம் என்று சொல்லி
இன்னொரு குற்றப்பத்திரிக்கை தயாரிக்க கவனத்தை செலுத்தி இருக்கிறார்.
பள்ளி ஆசிரியை பெற்றவர்களிடம் சொன்னதுடன், அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள
முயன்றும் பலனில்லாமல் போனது. விவாகரத்து ஆன பின்னாலும் குழந்தைகள் நலன்
கருதி, பெற்றவர்கள் நட்பு பாராட்ட முடியாமற்போனாலும், ஒருவரை ஒருவர்
வெறுக்காமல் இருக்கவாவது முயற்சிக்கலாம் |