நமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய வாயில் 600 விதமான பாக்டீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உடல் செல்களின் எண்ணிக்கையைப்போல் பத்துமடங்கு அதிகம் என்பது இன்னும் வியப்பானது இல்லையா? ஆம். அதுதான் உண்மை. உங்களுடைய வாயில் உள்ள பாக்டீரியா குடும்பமும் உலகின் வேறொருபகுதியில் வாழும் இன்னொருவரின் வாயில் வாழும் பாக்டீரியா குடும்பமும் ஒன்றுபோல் இருப்பது என்பது அதைவிட வியப்பானது. உலகம் முழுவதிலுமிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபிறகு இம்முடிவு எட்டப்பட்டுள்ளது. மனிதனின் சிறுகுடலிலும், தோலிலும் குடியிருக்கும் பாக்டீரியாக்கள் பற்றியே இதுவரை ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வந்தன. இப்போது மனிதனின் வாயில் வாழும் பாக்டீரியாக்களைப்பற்றி ஆய்வாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. நோய்களின் நுழைவுப்பாதை வாய் என்பதால் இந்த ஆய்வு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. ஜெர்மனியின் மாக்ஸ்ப்ளங்க் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் டாக்டர் மார்க் ஸ்டோன்கிங் என்பவரும் அவரது குழுவினரும் உலகம் முழுவதிலும் இருந்து உமிழ்நீர் மாதிரிகளை சேகரித்து வகைப்படுத்தி ஆராய்ந்து வருகின்றனர். ஆரோக்கியமான 120 நபர்கள் புவிப்பரப்பின் ஆறு வேறுபட்ட இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து உமிழ்நீர் மாதிரிகள் திரட்டப்பட்டன. செல்லின் முக்கியமான பகுதிப்பொருளாகிய ரிபோசோம்களில் உள்ள 16S rRNA ஜீன்களில் புதைந்துள்ள ரகசியங்களை வெளிக்கொணரும் ஆய்வுகளை ஸ்டோன்கிங் குழுவினர் தற்போது நடத்திவருகின்றனர். வாயில் வாழும் பாக்டீரியாக்களிடையே உள்ள வேறுபாடுகளையும் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் நோய்கள் இவற்றுடன் உள்ள தொடர்பையும் இன்னும் ஆராய வேண்டியுள்ளது. உணவு, கலாச்சாரம் இவற்றிடையே மனிதர்களிடம் வேறுபாடு இருந்தாலும் அவர்களுடைய வாயில் வாழும் பாக்டீரியாக்களிடையே ஒத்தகுணம் இருப்பதைக் கண்டு ஸ்டோன்கிங் வியக்கிறார். உமிழ்நீரை ஆராய்தல் என்பது முகம் சுளிக்கவைக்கும் செயல் என்றாலும், நம்முடைய வாயில் யார் குடியிருக்கிறார்கள் என்பதும் அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன என்பதையும் நாம் தெரிந்துகொள்வது முக்கியமில்லையா? நம்முடைய பிள்ளைகள் கைசுத்தமாகவும், வாய்சுத்தமாகவும் வாழவேண்டியது அதைவிட முக்கியமில்லையா?
Source: http://sivatharisan.karaitivu.org/ |