அக்பர் நடத்தும் அனைத்து சோதனைகளிலும் பீர்பால் வெற்றி பெற்று வந்ததை பொறாமைக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அக்பரும் பீர்பாலை ஏதாவது ஒரு வகையில் திணற வைத்து அவருக்கு தோல்வியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும் காய்ச்சலால் அவதிப்படுவது போலவும் நடித்தார். போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்.
அக்பர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்பதைக் கேள்விபட்ட பீர்பால் பதட்டத்தோடு சென்றுப் பார்த்தார். தன்னை வைத்தியர்கள் வந்து பார்த்து விட்டதாகவும் உடல்நிலை தேறவில்லை என்றும் கூறினார். பீர்பால் வருத்தத்துடன் அக்பரையே பார்த்துக் கொண்டிருந்தார்.
பீர்பால் எனது உடல்நிலை குணமடைய வைத்தியர் ஒரு வைத்தியம் கூறினார். அதை யாராலும் செயல்படுத்த முடியவில்லை. உங்களால் மட்டும் தான் முடியும் செய்வீர்களா? என்றார் அக்பர்.என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள், என்றார் பீர்பால்.எருதின் பாலை கொண்டு வந்து அதை சூடாக காய்ச்சி கல்கண்டு போட்டு குடித்தால் சரியாகி விடும் என்று வைத்தியர் கூறினார். என்றார் அக்பர். பீர்பால் வசமாக மாட்டிக் கொண்டார் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
எருதின் பால் என்றதும் பீர்பால் அதிர்ச்சியில் உறைந்து போனார். இது அரசரின் விபரீத சோதனை என்பதை புரிந்து கொண்டார்.
அரசே….. எருதின் பாலை கொண்டு வர எனக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுங்கள். எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு மன்னரிடம் விடைபெற்றார். இந்த முறை நிச்சயம் பீர்பால் வெற்றி பெற இயலாது என்று இறுமாப்புடன் சிறித்துக் கொண்டார் அக்பர். வீட்டுக்கு சென்ற பீர்பால் இரவு முழுவதும் தூங்காமல் அரசரிடண் கொடுத்த வாக்கை எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்துக் கொண்டேயிருந்தார். முடிவில் அருமையான யோசனை ஒன்றைக் கண்டுபிடித்த பிறகு தான் அவர் நிம்மதி பெருமூச்சுவிட்டு உறங்கினார்.
பீர்பாலின் மனைவி நள்ளிரவு நேரத்தில் வீட்டில் இருந்த அழுக்குத் துணிகளை மூட்டையாக கட்டிக் கொண்டு அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்த குளக்கரைக்குச் சென்றார். மூட்டையிலிருந்து ஒவ்வொரு துணியாக எடுத்து பெரிய கல் ஒன்றின் மீது பலமாக துவைக்க ஆரம்பித்தாள். அமைதியான அந்த நேரத்தில் துணி துவைக்கும் ஓசை அரண்மனையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்த அக்பரின் காதுகளை எட்டியது.
இந்த ராத்திரியில் எதற்காக துணி துவைக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு அரண்மனையிலிருந்து வெளியில் வந்து குளக்கரைக்குச் சென்றார்.பீர்பாலின் மனைவியை இதற்கு முன்னால் அக்பர் பார்க்காதபடியால் ஏனம்மா எதற்காக நடு இரவில் துணிகளை துவைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கோபமாகக் கேட்டார்
அரசே, ரெண்டு நாட்களுக்கு முன்புதான் என் கணவர் பெண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தார். உதவிக்காக சேர்ந்திருந்த வேலைக்காரியும் இன்று வரவில்லை. துவைக்க வேண்டிய துணி நிறைய சேர்ந்து விட்டது. வேறு என்ன செய்வது. எல்லா வேலைகளையும் பார்த்து விட்டு துவைப்பதற்காக இப்போது கொண்டு வந்தேன்! என்று துக்கம் தொண்டையை அடைக்க கூறினாள் பீர்பாலின் மனைவி. இதைக் கேட்ட அக்பர் அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனார். ஆண்களுக்கு பிரசவமா? கேள்விக் குறியோடு யோசித்தார் மன்னர். இதுதான் சமயம் என்று எண்ணிய பீர்பாலின் மனைவி எருதின் பாலை அரசர் கொண்டு வர சொல்லுவதை விட ஆண்கள் பிள்ளை பெறுவதில் ஆச்சர்யமோ, அதிசயமோ இல்லையே! என்றாள். பொறுமையாக அதன் பிறகு தான் பீர்பாலின் மனைவி என்பதை தெரிந்து கொண்டார். தனக்கு சரியாக பாடம் புகட்டியதை உணர்ந்தார்ய வேறு வழியில்லாமல் அக்பர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பீர்பாலை வரச்சொல்லி பரிசுகளை கொடுத்து அனுப்பினார்.
Source: http://www.tamilkadal.com/?p=2213 |