முன்னொரு
காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக
இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும்
முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம்
கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம்
தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான். ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக
வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து
பெட்டிகளுக்குள் வைத்து மூடினான். எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின்
முதுகில் ஏற்றிவிட்டு மிகக்குறைந்த கூலிக்கு அமர்த்திய முட்டாள்
வேலைக்காரர்கள் இருவருடன் புறப்பட்டான்.
அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றியதால் வழியில் பாரம் தாங்காமல் ஒட்டகம் கீழே விழுந்து விட்டது.
வேலைக்காரர்களைப்
பார்த்து அவன், ""நீங்கள் இங்கேயே ஒட்டகத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
நான் பக்கத்தில் இருக்கும் ஊருக்குச் சென்று இன்னொரு ஒட்டகம் கொண்டு
வருகிறேன். பிறகு சுமையை இரண்டு ஒட்டகத்திலும் சமமாக வைத்துப் பயணத்தைத்
தொடரலாம். நான் இல்லாத போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நான்
வருவதற்குள் மழை வந்துவிட்டால் பெட்டிகளை எப்படியாவது நனையாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
வேலைக்காரர்கள்
இருவரும் சரியான முட்டாள்கள். இது தெரிந்தும் குறைந்த கூலி கொடுத்து
அவர்களை விலை பேசியிருந்தான் வணிகன். எல்லாரும் எவ்வளவோ சொன்னார்கள்.
ஆனால், வியாபாரியோ வழித்துணைக்குதானே இவர்களை அழைத்துச் செல்கிறேன்.
எடுபடி வேலை செய்யணும். இதனால் எனக்கு ஒரு பாதிப்பும் வராது என்று
நினைத்தான்.
சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது.
"நம் முதலாளி பெட்டிகளை நனையாமல் பார்த்துக் கொள்ளச் சொன்னார். இப்பொழுது என்ன செய்வது?'' என்று கேட்டான் ஒருவன்.
"பெட்டிகளுக்கு
உள்ளே இருக்கின்ற துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகள் மேலே போட்டு
மூடுவோம். பெட்டிகள் நனையாமல் பார்த்துக் கொள்வோம்,'' என்றான் அடுத்தவன்.
இருவரும் பெட்டிகளுக்குள் இருந்த விலையுயர்ந்த துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகளுக்கு மேல் போட்டனர்.
மழையில் நனைந்து துணிகள் எல்லாம் ஈரமாகிவிட்டன.
ஒட்டகத்துடன் திரும்பிய வணிகன், ""ஐயோ! என்னடா செய்தீர்கள்? துணிகள் எல்லாம் நனைந்து வீணாகிவிட்டதே,'' என்று கோபத்துடன் கத்தினான்.
"முதலாளி
நீங்க சொன்னபடி பெட்டிகள் நனையாமல் இருப்பதற்காகத் துணிகளை எல்லாம் அதன்
மேலே போட்டோம். அந்தப் பெட்டிகள் சிறிது கூட நனையவில்லை. நீங்களே
பாருங்கள்,'' என்றான் அவர்களில் ஒருவன்.
"முட்டாள்களான உங்களுக்கு இனி என்னிடம் வேலை இல்லை,'' என்று அவர்களை விரட்டினான் வணிகன்.
கொஞ்சம் காசுக்கு சிக்கனம் பார்க்கப் போய் முதலுக்கே நஷ்டம் வந்ததை எண்ணி வேதனையுடன் ஊர் திரும்பினான் வணிகன். |