சேவைகள் |
CATEGORIES | ||||||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » சிறுவர் உலகம் » சிறுவர் கதைகள் | [ Add new entry ] |
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
பறக்கும் தங்கக்குதிரையானது இராமநாதனை சுமந்துக் கொண்டு மஞ்சள் ஆற்றைக்
கடந்து, பட்டு தேசத்தின் எல்லையில் நுழைந்தது. ஊரே அமைதியாக இருந்தது,
மக்கள் நடமாட்டமே தெரியவில்லை, நேராக அரண்மனை அருகில் இறங்கி உள்ளே
சென்றார், எப்படியும் அரசரை சந்தித்து கொடிய மந்திரவாதி கடம்பனை பற்றிய
விபரங்கள் அறிய வேண்டும். அதன்படி மந்திரவாதியை வெல்ல வேண்டும் என்பது
அவரது திட்டம். அரண்மனையில் பயங்கர நிசப்தம் நிலவியது, உள்ளே சென்ற இராமநாதன் கண்ட காட்சி அவரது திட்டத்தை பொடிபொடியாக்கியது. உள்ளே அரசர் மட்டுமன்றி அவரை சுற்றியிருந்த அனைவரின் உடலும் மரத்தால் ஆனது போல் இருந்தது. அரசரின் தலை மட்டுமே மனித உருவில் இருந்தது. அரசரின் அருகே ஓடிச் சென்ற இராமநாதன் பட்டு தேச மொழியில் “அரசே! உங்களுக்கு என்ன ஆச்சுது, ஏன் இங்கே மரச்சிலையாக காட்சியளிக்கிறார்கள், என்ன நடந்தது, விபரமாக கூறுங்கள்” என்று பரபரப்பாக பேசினார். அரசர் “இளைஞனே! உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், எங்கள் கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கை வருகிறது, நடந்ததை அப்படியே கூறுகிறேன், கேள்” “எங்கள் நாட்டிற்கும் காந்தார தேசத்திற்கும் சில நேரங்களில் எல்லைப் பிரச்சனைகளால் போர் நிகழ்ந்த காலம், ஒரு நாள் எங்கள் ஒற்றர் தலைவன் கொடுத்த செய்தியில், காந்தார தேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்த ஒரு பயங்கரமான மந்திரவாதி வந்திருப்பதாகவும், அவன் புதுப்புது ஆயுதங்கள் தயாரித்து கொடுப்பதாகவும் சொல்லியிருந்தார், ஆக நாமும் அதே போல் ஆயுதங்கள் வைத்திருக்காவிட்டால் காந்தார தேசம் நம்மை அடிமைப்படுத்திடும் என்று நினைத்தேன், என் அமைச்சர்களுடன் பேசிய பின்பு, எங்கள் ஒற்றர் படைத்தலைவன் மூலமாக திறமையான சில இளைஞர்களை காந்தார தேசத்திற்கு அனுப்பி, அங்கே இருக்கும் பயங்கரமான ஆயுதங்களின் தன்மைப்பற்றி அறிந்து அடிக்கடி செய்தி அனுப்பினார்கள். நாங்களும் எங்கள் திறமையை பயன்படுத்தி அதே மாதிரியான ஆயுதங்களை தயாரித்து, யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தோம், போர்க்காலத்தில் பயன்படுத்தவும் திட்டமிட்டிருந்தோம்”. “சில காலத்தின் பின்னர் மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது, அது தான் காந்தார தேச மன்னரையும், நாட்டு மக்களையும் கொடிய மந்திரவாதி கற்சிலைகளாக மாற்றிவிட்டான், ஆக இனிமேல் எங்களுக்கு எதிரியில் ஒருவன் குறைந்தான் என்று நினைத்தோம், அப்படி இருக்கையில் ஒரு நாள் எங்கள் முன்னாள் அந்த கொடிய மந்திரவாதி தோன்றினான்.” மந்திரவாதி “அரசே! உன் எதிரியான காந்தார தேச மன்னனை கல்லாக்கி விட்டேன், உனக்கு மகிழ்ச்சி தானே, இனிமேல் நான் உனக்கு உதவ நினைக்கிறேன், உனக்கு அதே போல் பல ஆயுதங்கள் தயாரித்து கொடுக்கிறேன்” “ உன்னுடைய பேச்சுக்கு மிக்க நன்றி, தற்போது எங்களுக்கு உன்னுடைய உதவி தேவையில்லை, மேலும் எங்களாலே அந்த வகையான ஆயுதங்கள் தயாரிக்கும் வல்லமை இருக்கிறது” நான் இப்படி கொஞ்சம் தெனாவெட்டாக பேசியது மந்திரவாதியை கடுப்படித்திருக்க வேண்டும், ஆகையால் கடும்கோபம் கொண்டு எங்களை எல்லாம் மரச்சிலைகளாக்கிவிட்டு காந்தார தேச இளவரசியை கொண்டு சென்றது போல் என் மகளையும் அவன் கடத்தி கொண்டு போய் விட்டான். நாங்களும் பல ஆண்டுகளாக சிலையாக இருக்கிறோம், இன்று தான் உன்னை பார்த்ததில் கொஞ்சம் நம்பிக்கை உண்டாகிறது. “அரசே! கவலை வேண்டாம், இறைவன் அருள் எனக்குண்டு, கட்டாயம் அந்த மந்திரவாதியை வென்று உங்களுக்கும் உங்கள் நாட்டிற்கும் நல்லது செய்வேன்” ” வீர இளைஞனே! நீ மட்டும் சொன்னது செய்தால், நீ என்ன கேட்டாலும் கொடுப்பேன், இது உறுதி” “ஆமாம் அரசே! மந்திரவாதி தான் பலச்சாலியாச்சே, அவன் நினைத்தால் இளவரசியை திருமணம் செய்யலாமே, ஏன் உங்க சம்மதம் கேட்கிறான், அது ஏன்?” “ இளைஞனே! அந்த மந்திரவாதிக்கு ஒரு சாபம் இருக்கிறது, அவன் ஒரு முனிவரிடம் சீடனாக இருந்த போது, அவரது மந்திர தந்திர சக்திகள் அனைத்தும் விரைவில் கற்றுக் கொள்ள நினைத்து, அவரது மகளின் மனதை மாற்றி திருமணம் செய்ய நினைத்திருக்கிறான், அது அறிந்து கோபப்பட்ட அவனது குரு ஒரு சாபமிட்டார். தீய எண்ணத்தில் என்னிடம் சீடனாக சேர்ந்த நீ, குருவின் மகளையே திருமணம் செய்ய நினைத்தாய், இனிமேல் திருமணம் செய்ய நினைத்தால் அந்த பெண் மற்றும் பெற்றோரின் விருப்பம் இல்லாமல் செய்ய முடியாது, அப்படி செய்தால் உன் தலை சுக்கு நூறாக நொறுங்கிவிடும், ஜாக்கிரதை என்று சொல்லிட்டார்” “ அரசே! மந்திரவாதியைப் பற்றி வேறு ஏதாவது விபரம் தெரிந்தால் சொல்லுங்களேன்” “ கடம்பன், பனித்தேசத்தின் எல்லையில் இருக்கும் மனிதர்கள் புக முடியாத கடும் வனத்தில் இருக்கிறான்” “நன்றி அரசே! இன்றே நான் பனி தேசத்திற்கு சென்று உங்கள் நண்பரான அந்நாட்டு மன்னரை சந்தித்து, அவரின் உதவியை பெற்று, வனத்தில் நுழைந்து, கொடியவனை அழித்து வருகிறேன், விடை கொடுங்கள்” அரசரிடம் விடை பெற்று, பனி தேசத்திற்கு ஏற்ற உடைகளை அணிந்து குதிரையில் ஏறி பனிதேசத்தை நோக்கி பயணமானார். வாழ்க்கையில் ஒரு முறையாவது பனிதேசத்திற்கு செல்லவேண்டும் என்று நினைத்திருந்த இராமநாதனுக்கு தந்தை படிக்க செல் என்று சொன்ன போது அடைந்த மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சி அடைந்தார். பனிதேசத்தின் மீது பறந்த போது கீழே எங்கே பார்த்தாலும் பனிப்படர்ந்து வெள்ளையாக காணப்பட்டது. இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே பனிதேச மன்னர் வசிக்கும் அரண்மனையின் அருகில் இறங்கினார். கடும்குளிர் நிலவியதால் மக்கள் நடமாட்டம் இல்லை போல் என்று நினைத்து அரண்மனை உள்ளே நுழைந்த இராமநாதனின் தண்டுவடமே சில்லிட்டது போல் உணர்ந்தார். அரசவையில் அரசரும் மற்றவர்களிம் வெண்ணிறத்தில் பனிக்கட்டி சிலைகளாக காட்சி அளித்தார்கள். அரசரின் தலை மட்டுமே மனித உருவில் இருந்தது. இராமநாதன், என்னடா எங்கே போனாலும் இந்த மந்திரவாதி தொந்தரவு தாங்க முடியலையே, அவனை சீக்கிரம் ஒழித்துக் கட்ட வேண்டும், இல்லேன்னா உலகம் முழுவதும் அவனது அட்டூழியம் பரவிவிடும் என்று நினைத்தார். அரசரும் காந்தார, பட்டுதேச மன்னர்கள் சொன்ன கதையே சொன்னார். இனியும் தாமதிக்கக்கூடாது என்று அரசரிடம் விடைப்பெற்று தங்ககுதிரையை அழைத்து, அதன் மேல் ஏறி மீண்டும் பறக்கத் தொடங்கினார். இரவும் பகலுமாக இரண்டு நாட்களின் பயணத்தின் பின்னர் பனிதேசத்தின் எல்லையை அடைந்தார். வேகுதூரத்தில் பச்சை பசேலென பெரிய பிரதேசமே வனப்பகுதியாக காட்சியளித்தது. இராமநாதனுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியலை, ஒருவழியாக மந்திரவாதியின் இருப்பிடத்திற்கு அருகில் வந்தாச்சு, இப்போ அவனை எப்படி வெல்வது, சரி முதலில் அவனது மாளிகையை கண்டுபிடிப்போம் என்று நினைத்துக் கொண்டு குதிரையில் அந்த வனப்பகுதியை சுற்றி சுற்றி பார்த்தார், மாளிகையே தெரியவில்லை. எப்படி கண்டுபிடிப்பது என்று தேடிய போது, ஒரு இடத்தில் மரங்கள் தீயால் கருகி இருப்பதைக் கண்டார், ஆக மொத்தம் அதன் அருகில் தான் மாளிகை இருக்க வேண்டும் என்று நினைத்து, அங்கே பறந்தப்படியே மந்திரவாதியின் மாளிகையை கண்டுபிடித்து விட்டார், பின்னர் குதிரையுடன் கொஞ்ச தொலைவில் கீழே இறங்கினார். குதிரையிடம் நாம் இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு, மாளிகையை நோக்கி நடந்தார். மாளிகையை ஜாக்கிரதையாக நெருங்கியவர் நெருப்பை மிதித்தது போல் பயந்து நின்றார். மாளிகையின் முன்னால் காவலுக்கு இரண்டு பெரிய நெருப்பை கக்கும் டிராகன்கள் இருந்தது, இவற்றின் நெருப்பால் தான் மரங்கள் கருகி இருந்ததை புரிந்துக் கொண்டார், அவை தன்னைப் பார்த்தால் தானும் எரிந்து போக வேண்டியது தான், எப்படி அவற்றை ஏமாற்றி மாளிகையில் நுழைவது என்று யோசித்தார். அப்போ குதிரையானது இராமநாதனை நோக்கி “எஜமான், நீங்க கவலைப்பட வேண்டாம், நான் உதவுகிறேன், நான் எப்படியாவது அந்த இரண்டு டிராகன்களை ஏமாற்றி என் பின்னால் வர வைக்கிறேன், அந்த இடைவெளியில் நீங்க மாளிகையில் நுழைந்து விடுங்கள்”. குதிரையானது இராமநாதனை விட்டு மாளிகையில் எதிர்புறமாக மறைந்து சென்று பயங்கரமாக கனைத்தது, கனைப்புச் சத்தம் கேட்ட டிராகன்கள் உணவுக்கு ஒரு குதிரை கிடைச்சாச்சு என்று குதிரையை பிடிக்க ஓடியன, தங்ககுதிரையானது அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஓடியது, அந்த நேரத்தில் இராமநாதன் வேக வேகமாக ஓடி மாளிகையில் நுழைந்தார். தங்க குதிரையானது வானில் பறக்கத் தொடங்கியது, டிராகன்களும் விரட்டிக் கொண்டு பறந்தன, ஆனால் தங்ககுதிரையை பிடிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு மாளிகையின் காவலுக்கு திரும்பின. மாளிகையின் உள்ளே நுழைந்த இராமநாதன் அங்கே பயங்கர நிசப்தம் நிலவியதை கண்டார், பெரிய பெரிய தூண்களில் பயங்கரமான மிருங்கள் உயிரோடு இருப்பது போல் சிற்பங்கள் இருப்பதைக் கண்டார். ஒவ்வொரு அறையாக தேடி பார்த்த போது ஒரு அறையில் மூன்று இளவரசிகளும் சோர்ந்து போய் கவலையோடு இருப்பதைக் கண்டார். உள்ளே நுழைந்த இராமநாதனைக் கண்டு மூவரும் ஆச்சரியப்பட்டார்கள், இதுவரை மந்திரவாதி மட்டுமே வந்த அறையில் புதிய அழகான வாலிபனைக் கண்டதும் அவர்களால் நம்பமுடியவில்லை. இராமநாதன் “இளவரசிகளே! கவலைப்பட வேண்டாம், உங்களை காப்பாற்ற தான் நான் வந்திருக்கிறேன், எனக்கு நீங்க கொஞ்சம் உதவி செய்தால் போது மந்திரவாதியை நான் வெல்வேன், உங்கள் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும்”. “நயவஞ்சக மந்திரவாதியை தந்திரத்தால் வெல்ல வேண்டும், அவனது உயிர் அவனுடைய உடலில் இல்லை என்றும் எங்கே மறைத்து வைத்திருப்பதாகவும் வைத்திய மந்திரவாதி என்னிடம் சொன்னார், அது எங்கே என்பதை கண்டறிய வேண்டும், அதற்கு கால அவகாசம் இல்லை, எனவே அதை மந்திரவாதியின் வாயிலிருந்தே வரவழைக்க வேண்டும், எனக்கு உங்கள் உதவி தேவை” “உங்களில் யாராவது ஒருவர் மந்திரவாதியை திருமணம் செய்ய சம்மதம் என்று சொல்ல வேண்டும், பின்னர் மந்திரவாதியின் மதியை மயக்கி அவனிடமிருந்து விபரங்கள் பெற வேண்டும், மந்திரவாதியின் மதியை மயக்கும் மாய வேர் என்னிடம் இருக்கிறது, சொல்லுங்க உங்களில் யார் அதை செய்ய இருக்கீங்க?” இராமநாதன் அவ்வாறு கேட்டதும் பனிதேசத்தின் இளவரசி தைரியமாக முன்வந்தார். மந்திரவாதியை எவ்வாறு ஏமாற்ற வேண்டும் என்பதை தெளிவாக கூறினார். அத்துடன் தான் அதே அறையில் இருந்த பெரிய குதிருக்குள் ஒளிந்து கொண்டார். அன்று மாலையே மந்திரவாதி இளவரசிகள் தங்கியிருந்த அறைக்கு வந்தான். வழக்கம் போல் தன்னை திருமணம் செய்துக் கொள்ள அவர்களை மிரட்டினான். வழக்கத்திற்கு மாறாக பனித்தேசத்தின் இளவரசி அவனைப் பார்த்து புன்னகை செய்தார், அத்துடன் “மாவீரரே! நாங்கள் ஆரம்பத்தில் உங்களைக் கண்டு பயந்தோம், இப்போ உங்களின் வீரத்தையும் சக்தியையும் புரிந்துக் கொண்டோம், திருமணம் செய்தால் உங்களைத் தான் செய்வோம் என்ற முடிவுக்கு வந்தாச்சு” என்றார். அதைக்கேட்ட மந்திரவாதிக்கு நான் காண்பது கனவே, நினைவா என்று ஆச்சரியப்பட்டான்.. இளவரசிகளும் அவனுக்கு சுவையாக உணவு தயார் செய்து கொடுப்பதாக சொன்னார்கள். மந்திரவாதியும் மகிழ்ச்சியோடு ஒத்துக் கொண்டு, அறையை விட்டு வெளியேறினான், இரவில் மீண்டும் வருவதாக சொன்னான். உடனே இராமநாதன் வெளியே வந்து தன் கைப்பக்குவத்தை காட்ட, அருஞ்சுவை உணவு தயார் ஆனது, மீண்டும் குதிருக்குள் போய் ஒளிந்துக் கொண்டார். இரவில் வந்த மந்திரவாதியின் உணவின் சுவையாலும், உபசரிப்பாலும் மயங்கிப் போயிருந்தான், இராமநாதன் சொன்னப்படி சுவையான பாயாசத்தில் மந்திரவேரில் ஒன்றை பொடியாக்கி போட்டிருந்தார். அதை குடித்தப் பின்னர் மந்திரவாதியின் மதி மயங்கிவிட்டது. இராமநாதன் சொன்னப்படி பனிதேசத்தின் இளவரசி பேசத் தொடங்கினார் “மாவீரரே! நீங்களோ வயதானவர், உங்களுக்கோ எதிரிகள் அதிகம், அப்படி இருக்கையில் உங்களை மணந்தப்பின்னர் நீங்க விரைவில் மரணம் அடைந்தால், எங்கள் கதி என்ன ஆகும், அது மட்டுமே இன்னமும் பயமாக இருக்குது” “ பெண்ணே! வீண்கவலை வேண்டாம், உங்கள் மூவரையும் உங்க பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டால் எனக்கு சாகாவரம் கிடைத்து, மிகவும் அழகான வாலிபானாகி விடுவேன், மேலும் என் உயிரை நான் மறைவான இடத்தில் வைத்திருக்கிறேன்” “அப்படியா! ஆச்சரியமாக இருக்குதே, இப்படி கூட செய்ய முடியுமா?” என்று இளவரசி ஆச்சரியத்தோடு கேட்டார். “மூன்றெழுத்தில் என் மூச்சிறுக்கும்” என்று கூறியதோடு மந்திரவாதி மயங்கிப் போனான். மறுநாள் காலையில் மந்திரவாதி வழக்கம் போல் வெளியே சென்று விட்டான். இரவு முழுவதும் இராமநாதன் தூங்கவில்லை, அது என்ன மூன்றெழுத்தில் என் மூச்சிறுக்கும், அப்படி என்றால் மூன்றெழுத்து கொண்ட ஏதோ ஒன்றில் அவன் உயிர் இருக்கும் போலிருக்குதே, அது என்ன என்று யோசித்து யோசித்து மண்டை வலி எடுத்தது. மூன்று எழுத்து என்றால் பூச்சி, பூரான், பல்லி, பாம்பு, கொக்கு, காக்கா, கழுதை, குதிரை இப்படியாக விலங்குகள் பறவைகள் பட்டியலும் மல்லி, லில்லி, அல்லி, தாமரை என்று பூக்கள் பட்டியலும், இப்படி பல பட்டியல் போட்டும் பிடிபடாமல், தமிழ்மணத்தில் தன் பதிவான மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் படித்தும் மண்டை காய்ந்து போனது தான் மிச்சம். அடுத்த நாள் இரவில் மீண்டும் இளவரசிகள் உணவு கொண்டு போய் மந்திரவாதிக்கு கொடுத்து, இரண்டாவது மாயவேர் போட்ட பாயாசத்தை கொடுத்து பேச்சு கொடுக்க கடைசியாக “காட்டுக்குள் கயிறு விடுகிறான்” என்ற சொல்லை சொல்லி மயங்கி விட்டான். மீண்டும் இராமநாதனுக்கு தலை வலி வந்து விட்டது, அது என்ன காட்டுக்குள் கயிறு விடுகிறான், ஒரே புதிராகவே சொல்கிறானே மந்திரவாதி, ஒருவேளை மந்திரவேரின் சக்தி போதாதா என்று யோசித்தார். மூன்றாவது நாள் மந்திரவாதி “நாளை அபூர்வ பௌர்ணமி வருகிறது, உங்கள் தாய் தந்தையரை இங்கே கொண்டு வந்துவிடுவேன், அவர்கள் சம்மதிக்க வைக்க வேண்டியது உங்கள் வேலை, இல்லை என்றால் அனைவரையும் இங்கேயே வெட்டி கொன்று போட்டு விடுவேன், சாகாவரம் பெற வேறு வழிகள் உள்ளது” என்று கடுமையாக சொன்ன மந்திரவாதியை சமாதானப்படுத்தி, மீண்டும் உயிர் ரகசியம் பற்றி கேட்க, “சிப்பிக்குள் இருப்பது முத்தல்ல” என்று மூன்று வார்த்தைகள் சொல்லி மயங்கி போனான். ஒருவழியாக இளவரசிகளிடம் எப்படியும் நாளை இரவுக்குள் மந்திரவாதிக்கு முடிவு கட்டுகிறேன் என்று கூறி தூக்கத்திலிருந்த டிராகன்களைள ஏமாற்றிவிட்டு காட்டுக்குள் நுழைந்தார் இராமநாதன். தன் குதிரையில் ஏறி ஏதாவது தடயம் கிடைக்குமா என்று இரவு நேரத்தில் பயங்கரமான காட்டுக்குள் நுழைந்தார், பல மணி நேரம் தேடலுக்கு பின்னர் அங்கே பெரிய சுனை ஒன்று இருப்பதைக் கண்டார். மந்திரவாதி கடைசியாக சொன்ன சிப்பி, முத்து போன்ற வார்த்தைகள் சுனைக்கு பொருந்துகிறதே என்று மகிழ்ச்சி கொண்டார். வேகமாக சுனையை நோக்கி ஓடி போய் தண்ணீரில் காலை வைக்க இருந்தவர் நிலா வெளிச்சத்தில் தெரிந்த காட்சியைக் கண்டு பயந்து விட்டார். தண்ணீரில் படுபயங்கரமான பாம்புகளும், கொடிய விஷப்பற்களை கொண்ட பெரிய பெரிய மீன்களையும் கண்டு, காலை உடனே எடுத்துவிட்டார். தண்ணீரில் நீந்தி சிப்பியை தேடி எடுக்கலாம் என்றால் அது முடியாது போலிருக்குதே என்று கவலைப்பட்டார். அப்படியே அசதியில் அருகே இருந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்து உறங்கிவிட்டார். காலையில் பறவைகளின் சப்தம் கேட்டு விழித்தெழுந்தார். மாலைக்குள் மந்திரவாதியின் உயிர் ரகசியத்தத கண்டுபிடிக்க வேண்டுமே என்று யோசித்து அண்ணாந்து பார்த்தார், ஆலமரத்தில் நிறைய பறவைகள் கூடு கட்டியிருந்தன, அப்படியே வேடிக்கை பார்த்தவருக்கு மின்னல் அடித்தது போல் பரவசம் ஆனார். ஆலமரத்தின் விழுதுகளை கண்டவருக்கு மந்திரவாதி சொன்ன “காட்டுக்குள் கயிறு விடுகிறான்” புதிருக்கான விடை ஆலமரத்தின் விழுதுகள் என்பதை புரிந்து கொண்டார். மந்திரவாதியின் உயிர் கட்டாயம் சுனை நீரில் தான் இருக்க வேண்டும், அதுக்கு ஆலமரத்தின் விழுது உதவி செய்யும் என்பதை வைத்து சுனையை நன்றாக ஆராய்ந்தார், சுனையின் நடுவில் நிறைய வெள்ளை தாமரை பூக்கள் பூத்திருந்தன. மேலும் ஒன்றுமே புலப்படாமல் வழக்கம் போல் கண்களை மூடிக் கொண்டு தன் இஷ்ட தெய்வமான முருகனை வேண்டிக் கொண்டு கண்ணை திறக்க, என்ன ஆச்சரியம் தாமரை பூக்களில் ஒரு பூ மட்டும் சிவப்பாக மாறியது, அதன் நடுவில் ஏதோ ஒன்று பளீச்சென்று சூரிய ஒளியில் பலபலத்தது. “சிப்பிக்குள் இருப்பது முத்தல்ல” என்ற புதிருக்கான விடை தாமரை பூவில் இருப்பது மந்திரவாதியின் உயிர் என்பதை அறிந்து கொண்டார். சிவப்பு தாமரையானது குறிப்பிட்ட நேரம் மட்டுமே நீரின் மேல் இருந்தது, அது மீண்டும் நீரில் மறையவும் அதன் விஷமுள்ள மீன்கள் பாய்ந்து செல்வதுமாக இருந்தது. மந்திரவாதி யாரும் தாமரைப்பூவினை பறிக்காமல் இருக்க அவ்வாறு பாதுக்காப்பு ஏற்பாடு செய்திருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டார். ஆலமரத்தின் ஒரு கிளையானது தாமரைப்பூவின் மேலே சற்று உயரத்தில் இருப்பதையும் பார்த்து கொண்டார். வேக வேகமாக ஆலமரத்தின் விழுதுகளை வெட்டி கயிறாக தயாரித்தார். நேராக ஆலமரத்தின் மேல் ஏறினார், அங்கே இருந்த பாம்புகளை எல்லாம் வெட்டி தள்ளிவிட்டு நேராக தாமரைப்பூ வரும் இடத்திற்கு நகர்ந்து சென்றார், பின்னர் கிளையின் கயிற்றை கட்டு, மறுமுனையை தன் காலில் கட்டிக் கொண்டார். பின்னர் கயிற்றை நன்றாக முறுக்கிக் கொள்ளும் அளவும் இடமிருந்து வலமாக சுற்றினார், ரொம்ப நேரம் கணக்கு போட்டார், நேரமும் ஆகி வருகிறது, ஒருவழியாக முடிவுக்கு வந்தவர் இறைவனை வேண்டிக் கொண்டு, தன் உயிரை பணயம் வைத்து, தாமரைப்பூ மேலே வரும் நேரம் பார்த்து கிழே குதித்தார், அவர் கட்டியிருந்த கயிறு முறுக்கி போயிருந்ததால் வலமிருந்து இடமாக சுற்றிக் கொண்டே கிழே இறங்கினார், ஒரு கையில் பிடித்த வாளை கொண்டு தன்னை கடிக்க பாய்ந்த மீன்களையும் பாம்புகளையும் மின்னல் வேகத்தில் வெட்டினார், அப்படியே கிழே பாய்ந்தவர் சரியாக தாமரைப்பூவினை மறுகையால் பிடித்து பிடுங்க, இராமநாதனின் உடல் பாரத்தால் கிழே வளைந்த கிளையானது வேகமாக மேலே நகர இராமநாதனும் மேலே சென்றார். அய்யோ! என்ன கொடுமை, மேலே வரும் போது பாய்ந்த மீனானது பூவை பிடுங்கிக் கொண்டு நீரில் பாய, கடைசி நேரத்தில் பூவை பிடிக்க முயற்சித்து தோற்றுப் போய், மேலே மரக்கிளையினை பிடித்து ஏறிக் கொண்டார். இராமநாதனுக்கு சரியான ஏமாற்றம், கடைசி முயற்சியும் இப்படி கைவிட்டு போயிட்டதே, இனிமேல் எப்படி பூவை எடுத்து மந்திரவாதியை கொல்வது என்று கவலைப்பட, இடது கையில் தாமரைப் பூவின் இதழ்களோடு ஏதோ ஒன்று உறுத்ததை உணர்ந்தார், என்ன ஆச்சரியம் அவரது கை விரல்களின் நடுவில் ஒரு வெள்ளியினான வண்டு ஒன்று இருந்தது, ஆகா இது தானா மந்திரவாதியின் உயிர் இருக்கும் வெள்ளி வண்டு. வெள்ளி வண்டை பையில் பத்திரப்படுத்திக் கொண்டு வேகமாக மரத்தை விட்டு இறங்கிய இராமநாதன், மாலை நேரம் நெருங்குவதை உணர்ந்து தன் குதிரையை அழைத்தார். மந்திரவாதியின் மாளிகையை நெருங்கிய பின்னர் டிராகன்களை ஏமாற்ற மீண்டும் குதிரையின் உதவியை நாடினார், இந்த முறை குதிரையின் புத்திசாலித்தனத்தால் இரண்டு டிராகன்களும் ஒன்றை ஒன்றை எரிக்க, அவை சாம்பலானது. உள்ளே சென்ற இராமநாதன், அங்கே மந்திரவாதி பெரிய யாகத்தையும் நடத்திக் கொண்டு இளவரசிகளின் பெற்றோரை மிரட்டி, இராமநாதனையும் காணவில்லை, விதி விட்ட வழி என்ற நிலைக்கு வந்த பெற்றோர் மந்திரவாதியின் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள். மந்திரவாதி மகிழ்ச்சியோடு காந்தார தேச இளவரசியின் கழுத்தை மாலைப் போட போக, அங்கே அதிரடியாக நுழைந்த இராமநாதன் “கொடியவனே! நிறுத்து உன் காரியத்தை, இல்லையேல் உன்னை கொன்று விடுவென். இராமநாதனின் வருகையை கண்ட அனைவரும் மகிழ்ச்சியில் திழைத்தார்கள், மந்திரவாதியை தவிர. திடிரென்று ஒருவன் நுழைந்து தன்னை தடுத்து, தன் உயிரை எடுப்பதாக சொன்னதை கேட்டதும் மந்திரவாதிக்கு ஆத்திரம் வந்தது, யாருடா நீ சிறுவன், உன்னை என்ன செய்கிறேன் பார் என்று மந்திரம் சொல்ல கையை தூக்கினான், அதே வேகத்தில் இராமநாதன் அந்த வெள்ளி வண்டை தன் வாளின் கைப்பிடியால் தரையில் வைத்து நசுக்க, மந்திரவாதி அய்யோ என்று கத்திக் கொண்டு இரத்தம் வாந்தியெடுத்து செத்தான். மூன்று அரசர்களும் தங்கள் சுய உருவத்தை அடைந்தார்கள், நாட்டு மக்களும் சுய உருவத்தை அடைந்து மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள். ஏற்கனவே மந்திரவாதி பிடித்து வைத்திருந்த பல தேசத்து இளவரசர்களையும், வீரர்களையும் விடுவித்தார் இராமநாதன். மூன்று தேச அரசர்களும் இராமநாதனை தன் மருமகனாக்கிக் கொள்ள விரும்பினார்கள், இராமநாதனோ அதற்கு மறுப்பு தெரிவித்து பட்டு தேச, காந்தார தேச பிரச்சனையை தீர்க்க பட்டு தேச இளவரசியை காந்தார தேச இளவரசனுக்கும், காந்தார இளவரசியை பட்டு தேச இளவரசனுக்கும் திருமணம் செய்து வைத்தார். பனிப்பட தேச இளவரசியோ மணந்தால் இராமநாதன் தான் என்ற முடிவுக்கு வர, இளவரசியின் வீரமும் அறிவும் இராமநாதனுக்கு பிடித்துப் போக சம்மதித்தார். ஆனால் பெற்றோரின் சம்மதம் வாங்கியப்பின்னரே திருமணம் செய்ய முடியும் என்று கூறி, இளவரசியுடன் பறக்கும் தங்கக்குதிரையில் ஏறி தன் வீட்டை நோக்கி பறந்தார். | |
Views: 1619 | |
Total comments: 0 | |