தோலில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையானது “படர்தாமரை” எனப்படும் ஒரு வகையான தேமல் ஆகும். இது உச்சந்தலை, முகம், பிறப்பு உறுப்புகள் ஆகிய இடங்களில் படர்ந்து பரவும் தன்மையுடைய தொற்று நோயாகும்.
இத்தகைய தேமல் பரவிய இடங்களில் தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கருப்பு நிறமாகி விடும். தீராத அரிக்கும் தன்மை உடைய இதனை சொறிந்து விட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால் இது மேலும் உடலின் மற்ற பாகங்களில் பரவிடும். பெரும்பாலும் உடல் சுத்தம் மற்றும் உடைச் சுத்தம் இல்லாதவர்களுக்கே இத்தகைய தொற்று உண்டாகிறது.
தற்போதைய நவீன மருத்துவம் இந்த பிரச்சினைக்கு நல்ல பல தீர்வுகளை அளிக்கிறது. இருப்பினும் இந்த நோய்க் கிருமிகள் உடலின் உள்ளுறையும் தன்மையுடவை என்பதால் தொடர் சிகிச்சையினால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும். இது செலவு பிடிக்கக் கூடியது.
இன்று படர்தாமரை பிரச்சினைக்கு தேரையர் அருளிய தீர்வு ஒன்றினை பார்ப்போம். தேரையர் வாகடம் என்னும் நூலில் இருந்து இந்தக் குறிப்பு எடுக்கப் பட்டது.
கொன்றைக் கொழுந்து தகரைவிதை குழலா வரைவேர் குளவிந்தம்
மனறத் துளசி திரிபலையும் மற்று மிலுப்பைப் புண்ணாக்கும்
ஒன்றக் கூட்டிப் பழமோரில் ஊறி யெடுத்தெலு மிச்சம்சாற்றில்
நன்றா யரைத்துப் பூசியிட நாடா படர்தா மரைதானே.
- தேரையர்.
கொன்றைக் கொழுந்து, தகரவிதை, ஆவாரைவேர், மஞ்சள், துளசி, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி முள்ளி, இலுப்பைப் பிண்ணாக்கு, ஆகியவற்றை சம அளவில் எடுத்து தூளாக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் இவற்றை பழைய மோரில் ஊறவைத்து எடுத்து,எலுமிச்சைச் சாற்றுவிட்டு நன்கு அரைத்துப் படர்தாமரை இருக்கும் பகுதிகளில் பூசிவர குணமாகும் என்கிறார்.
மேலே சொன்ன மூலிகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். தேவை உள்ளவர்கள் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று இயற்கையான இந்த மருந்தினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெறலாம்.
|