ஆரோக்கியமே
அழகுக்கு அடிப்படை. எனவே, அழகாக இருப்பதற்கு உடலை ஆரோக்கியமாக வைத்துக்
கொள்ள வேண்டும். அழகு என்பதில் கூந்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பிறக்கும் போது ஒருவரின் தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும்.
தினம் 100 முடிகள் வரை உதிர்வது சகஜமானது தான். கூந்தலை பராமரிப்பதற்கான
எளிய முறைகளை காணலாம். கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள் *ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும்பு சத்து குறைவான உணவு பழக்கவழக்கம். * மன உளைச்சல், கோபம், படபடப்பு. * கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள். * கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது. * அளவுக்கதிகமான வெயில், உப்புக் காற்று, குளோரின் கலந்த நீர் மற்றும் சுற்றுப்புற மாசு. முடி உதிர்வது நிற்க வேண்டுமா? பெண்களுக்கு
முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண்டுமானால்,
புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.
முடி உதிர்வதை தடுக்க சில எளிய முறைகள்: *வாரம்
ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும்
குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த
காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை
விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும். *இரவில்
நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம்
பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது
நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும். *தலைமுடி நன்றாக வளர
கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து
வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக
இருக்கும். நரைமுடி கருப்பாக வேண்டுமா? பெரும்பாலானவர்களுக்கு
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. சிலருக்கு வம்சா வளியாகவும் நரை
வருவதுண்டு. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால்
பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது. * மருதாணி
இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம்
பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே
செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து
முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம்
ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும்.
குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு
பார்த்து கொள்ள வேண்டும். * கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள்
துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம்
இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.
நன்றி : தமிழ்குடும்பம் |