தமிழ்சினிமாவுக்கு ஒரு ‘வெயிட்டான’ புது வரவு இந்த
படத்தின் ஹீரோ சிவகிரி. ஆர்வம் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும்
நடிக்கலாம் என்ற இவரது தன்னம்பிக்கைக்கு வேண்டுமானால் முதல் சல்யூட்
போடலாம்! நடிப்பா? அடுத்த பாராவுக்கு போங்க சாரு...
கல்லூரிக்குள்ளேயே
தீவிரவாதத்தை வளர்க்கிற ஒரு குரூப்பை கையும் களவுமாக பிடிக்கிறார்
சிவகிரி. அதுவும் எப்படி? தானே மாணவராக அட்மிஷன் ஆகி! அட, நல்லாருக்கே
என்று நிமிர வைக்கிற மாதிரி சில காட்சிகளும் உண்டு அந்த கல்லூரி
கலாட்டாவில். ஈவ் டீசிங் செய்கிற மாணவர்களை கண்டு அஞ்சி நடுங்கும் அந்த
மலை மலை ஹீரோ, அவர்கள் சொல்லுவதையெல்லாம் செய்கிற போது தியேட்டரில்
சிரிப்பலை. அசமஞ்சம் என்று அவர்கள் நினைத்தால் அடுத்த சீனிலேயே அதிரடி
என்ட்ரி கொடுத்து வில்லன்களை வெளுக்கிற போது, பின்னணியில் “சிவகிரி
சிவகிரி” என்று ஆர் ஆர் இசைத்து மிரளடித்திருக்கலாம்! பிறகுதான்
பிரச்சனையே. நான்தாண்டா இந்த ஊரு ஏசி என்று வேடத்தை கலைக்கிறார் சிவகிரி.
அதுவரைக்கும் இருந்த மீசையையும் ஷேவ் செய்துவிடுகிறாரா? அசல் அமுல்பேபி
எபெஃக்ட்! காக்கி சட்டைக்குள் எரிமலையை எதிர்பார்த்தால், ஐஸ்கிரீமாக உலா
வருகிறார் மனுஷன்.
அவ்வப்போது வெளிநாடுகளில் இவர் ஆடும் டூயட்டும், அவ்வளவு பெரிய உடம்போடு இவர் கொடுக்கிற மூவ்மென்ட்டும் ரசனை பெப்பர்மென்ட்! கூட
இருந்தே குழி பறித்தால் பரவாயில்லை. வெடிகுண்டு, தீவிரவாதம் என்று
தமிழ்நாட்டையே மிரள வைக்கிறார் வில்லன் குகன். அவர் ஏன் இப்படி ஆனார்
என்பதற்கு ஒரு பிளாஷ்பேக். சிவகிரியின் காதல் மனைவி ருக்ஷனாவை இவரும்
காதலிக்கிறார். எனக்கு கிடைக்காதவள் உனக்கும் கிடைக்கக் கூடாது என்று அவர்
வில்லன் சிரிப்பு சிரிக்க, கடைசியில் சிவகிரியின் புல்லட்டில் தீவிரவாதி
கம் நண்பன் அவுட்.
வெங்கல
கடையில் யானை புகுந்த மாதிரி, சிவகிரியின் ஃபைட் சீன்கள் களை கட்டுகிறது.
கொஞ்சம் மெனக்கட்டால் குணச்சித்திர வேடங்களில் கலக்கலாம். மூன்று
கதாநாயகிகள். யாருமே நடிப்பை நம்பவில்லை என்பதை ஒவ்வொரு கோணத்திலும்
உணர்த்துகிறார்கள். தலைமை ஆசிரியர் வெண்ணிறாடை மூர்த்தியும், ப்யூன்
நெல்லை சிவாவும் சவசவ என்று பேசினாலும் லேசாக கிச்சுகிச்சு
மூட்டுகிறார்கள். ஒளிப்பதிவாளரை விட, இசையமைப்பாளர்
முந்துகிறார். கட்டிடம் கட்டுகிற ஆசையில் கல்லை அடுக்கியிருக்கிறார்கள்.
அஸ்திவாரத்தில்தான் ஆட்டம்! |