அந்தோணி யார்?னு அதிகம் குழம்ப தேவையில்லை. அவர் ஒரு அநாதைன்னு முதல் ரீலிலேயே சொல்லிவிடுகிறார்கள்.
பிறகு
ஏன் இப்படி ஒரு டைட்டில்? அந்தோணியார் கோவிலை அடிக்கடி காட்டுவதால்
இருக்கலாம். மேற்படி அநாதைதான் ஷாம். அந்த ஊரே போற்றி கொண்டாடுகிற
அளவுக்கு பெரிய மனசு இவருக்கு. உடம்புக்கு சுகமில்லே. கடலுக்கு போகலே
என்று கலங்கினால், அந்த குடும்பத்திற்காக வலையை எடுத்துக் கொண்டு கடலுக்கு
போகிறார். கஞ்சா கடத்தலில் சிக்குகிற ஆசாமியை மீட்க, தானே கடத்தியதாக
தலையை கொடுத்து இடுப்பை புண்ணாக்கிக் கொள்கிறார். இப்படி ஷாமின்
பாத்திரத்தில் வழிய வழிய கருணை!
வாடகைக்கு படகு கொடுக்கிறார்.
தங்குவதற்கு வீடு கொடுக்கிறார். ஆனால், மீனவர்களின் உழைப்பையெல்லாம்
குறைந்த விலைக்கு கூறு போடுகிறார் வில்லன் லால். ஏலம் என்ற பெயரில் இவர்
நடத்தும் அராஜகம் பொறுக்காமல் குமுறும் ஊர் ஜனங்களுக்கு ஆதரவாக ஷாம் குரல்
கொடுக்க, இவரை கண்டம் துண்டமாக வெட்டி கடலில் போட உத்தரவிடுகிறார் லால்.
கடலுக்குள் விழுந்த ஷாம், காய கல்பம் சாப்பிட்ட மாதிரி எழுந்து வர,
ஆரம்பமாகிறது அதிரடி ஆட்டம். இடது கையால் இருபது பேரையும், வலது கையால்
நாற்பது பேரையும் பறக்கவிடும் ஷாம் லாலுக்கு கொடுக்கிற இறுதி முடிவு என்ன?
ஆங்.. சொல்ல மறந்தாச்சு. இடையில் ஷாமுக்கு லவ் டிராக்கும் உண்டு.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனாக இந்த படத்திலும் பேராடியிருக்கிறார் ஷாம்.
சண்டைக்காட்சிகளில்
அவர் காட்டும் உக்கிரம் பலே. ஆரம்பத்தில் அமைதியாகவும், அப்புறம்
புயலாகவும் சீறும் போது நரம்புகளில் உஷ்ணம் ஏறுகிறது. காதல்
டூயட்டுகளிலும் மின்னல் வேக ஆட்டம்.
ஹீரோயின் மல்லிகா கபூருக்கு
மேக்கப்தான் ஓவர். நடிப்பென்னவோ டல். கடல் ஆராய்ச்சி செய்கிறவரிடம், நண்டு
பிடி போடுகிற ஷாம் அவ்வப்போது இவரை கலகலக்க வைப்பது ஒரு சில
டூயட்டுகளுக்கு உதவியிருக்கிறது.
விவேக்கின் மீனவ நண்பன் கெட்டப்
தியேட்டரையே திக்கு முக்காட வைக்கிறது. காதலி மீளாள் உதவியோடு இவர்
முன்னறே முயல்வதும், கூடவே இருக்கிற குளுவான்களே அதை கெடுத்துவிடுவதுமாக
ஒரே அமர்க்களம்.
வில்லன் லால் எரிமலையாக பொங்கினாலும், ஒரே மாதிரி ஸ்டைலை ஃபாலோ பண்ணுவது சற்றே அலுப்பு.
கடலும்,
கடல் சார்ந்த பகுதிகளையும் ஒரு அலையின் பாய்ச்சலை போல புத்துணர்ச்சியோடு
கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சாண்டோனியா. தினாவின் இசையில்
மல்லாக்கொட்டை கண்ணு..., மணியோசை கேட்கலியோ... இனிமை.
திமிங்கலத்தை நினைத்து வலை வீசியிருக்கிறார் புதுமுக இயக்குனர் சி.டி.பாண்டி. கிடைத்ததென்னவோ வெறும் கெண்டை குஞ்சுகள்!