ஃபேனை கொண்டு வந்து மூக்கினுள்ளேயே வைத்த மாதிரி, திணற திணற அடித்திருக்கிறார்கள். சுட சுட விருந்து.
இது
நமீதா மீல்ஸ் மச்சி! "எங்க பாஸ்சிடம்தான் கேட்கணும்" என்று நாசர் பில்டப்
கொடுக்க, நச்சென்று ஹெலிகாப்டரில் வந்திறங்கும் நமீதா, அதன்பின்
ரசிகர்களின் மனசில் ஹெலிபேட் வைக்காமலே லேண்ட் ஆகிறார். அவர் வருகிற
காட்சிகள் எல்லாமே குலை குலையா 'பந்தி'ரிக்காதான் போங்க.... மூலாதாரம்
நமீதா என்ற குறிக்கோளோடு கதை பின்னியிருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ
மற்றதெல்லாம் சேதாரம்!
தனியார் தொலைக்காட்சியில் சீனியர் புரோகிராம் ஆபிசர் ஸ்ரீகாந்த்.
இவரது புரோகிராம்கள் எல்லாமே டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப். ஆனால்,
முதலாளியம்மா நமீதாவோ, இவரை ஹோப் லெஸ் என்கிறார். ஏன்? புளியை கரைக்கிறது
அந்த ப்ளாஷ்பேக். வெளிநாட்டில் இவரை சந்திக்கும் ஸ்ரீகாந்த்தை காந்த
கண்ணால் வீழ்த்துகிறார். (கண்ணால் மட்டுமா?) அப்படியே பசி
எடுத்தவர்களுக்கெல்லாம் இலை போடுவதும் இவரது ஹாபி
என்பது தெரியவர, அங்கேயே காதலை முறித்துக் கொள்கிறார் ஸ்ரீகாந்த்.
அதன்பின் எப்படி எப்படியோ ஸ்ரீகாந்துக்கே 'பாஸ்' ஆகிறார் நமீ. விட்ட குறை,
தொட்ட குறையாக தமிழ்நாட்டுக்கு வரும் இவர், ஸ்ரீகாந்த்தை அடைய முயல, இவர்
விலக, ஆரம்பிக்கிறது யுத்தம்.
தன்னை கற்பழிக்க முயன்றதாக பொய் குற்றம் சுமத்துகிறார் நமீ.
இல்லை என்பதை நிரூபிக்க கோர்ட்டுக்கு போகிறார் ஸ்ரீ. இதுவரைக்கும்
நல்லாதான் போவுது. அதுக்கு பிறகு கேமிராவை கோர்ட்டுக்குள்ளே வைத்துவிட்டு
டைரக்டரும் தம்மடிக்க போய்விட்டதுதான் சோகம். வளவளவென்று கோர்ட்டில்
பேசிக் கொண்டே இருக்கிறார்கள். 'இனி சமாதானம் கிடையாது. சண்டைதான்' என்று
துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்த ஸ்ரீகாந்த், ஒரு ஆக்ரோஷமும் இல்லாமல்
அசடு வழிவது எப்படி சண்டையாகுமோ?
ஸ்ரீகாந்தின்
மனைவியாக நடித்திருக்கும் ஹேமமாலினி ஒரு டூயட்டும், கொஞ்சம் கோபமுமாக
இடத்தை காலி பண்ணுகிறார். இங்கே விட்ட இடத்தை அடுத்த படத்தில் பிடிக்க
ஆசிர்வதிப்போமாக! 'பிரேக் த ரூல்ஸ்' தத்துவத்திற்காக ஓரிடத்தில் பாராட்டு
வாங்குகிறார் டைரக்டர் கே.ராஜேஷ்வர். அது ரகசியாவையும் நடிக்க வைத்த
இடத்தில்தான் என்பது சொல்லாமலே புரிந்திருக்குமே. இவர் ஒரு மூக்கு
கண்ணாடியை ஆரம்பத்தில் காட்டும்போதே தெரிகிறது, இதுதான் க்ளைமாக்ஸ்
சக்கராயுதம் என்று.
பொருந்தாத நீதிமன்ற செட்டில், விவேக் விடும் 'பஞ்ச்'சுகள்
ஒவ்வொன்றும் சரவெடி. கொட்டாவி நேரத்தில் பிளாக் டீ ஊற்றி கண்ணயர்தலில்
இருந்து காப்பாற்றுகிறார் மனுஷன்.
எல்லா
புகழும் இறைவனுக்கே என்பது மாதிரி, இப்படத்தின் எல்லா புகழும்
ஒளிப்பதிவாளர் ஜெய் கேமில் அலெக்சுக்குதான் போய் சேர வேண்டும். அழகும்,
கம்பீரமும் கலந்த நேர்த்தியான மிரட்டல் அது. யதிஷ் என்ற புதிய
இசையமைப்பாளர். எந்த பாடலும் மனதில் நின்றதாக தெரியவில்லை. கோர்ட் சீனில்
கொட்டாவி விட்டிருக்கிறார் எடிட்டர் ரகுபாபு. ஸ்ரீகாந்த்துக்கும்
நமீதாவுக்கும் நடுவில் ட்விஸ்டுகளை கிளப்பி சவாலாக முடித்திருக்க வேண்டிய
படத்தை 'சவசவ' சூயிங்கம் ஆக்கியிருக்கிறார் இயக்குனர் கே.ராஜேஷ்வர்.
மொத்த படமும் நமீதா, வேறென்ன இருக்கு புதுசா? |