நல்ல காதலில் இருந்து கள்ளக்காதல் வரைக்கும் எல்லா காதலையும் அலசிய தமிழ்சினிமாவில் மற்றுமொரு காதல் கதை...
ஏழை ஹீரோ, பணக்கார காதலி. நொறுக்கு தீனியாக ஆரம்பிக்கிற லொள்ளு, ஒருகட்டத்தில் ஹீரோ உதயா மேல் காதலை வரவழைக்கிறது ஹீரோயின் சிந்துவுக்கு.
கல்குவாரி ஓனரின் மகள் இப்படி தன் மேல் காதலாவார் என்பதை எதிர்பார்க்காத
கூலித்தொழிலாளியின் மகன் உதயா எச்சில் விழுங்குகிறார். ஏற்பதா? வேண்டாமா?
ஒருவழியாக எஸ் சொல்லி, ஏக்கத்தை தனித்தாலும் சூழ்நிலையே வில்லனாகிறது
இவர்களின் காதலுக்கு. மீண்டும் சேர்ந்தார்களா? க்ளைமாக்ஸ்.
சேனல் ஒன்றுக்காக தனது கிராமத்து திருவிழாவை படம் எடுக்க போகும்
உதயா, குவாரியில் கல் உடைக்கும் அம்மாவையும் பார்க்க போகிறார். அங்கேதான்
ஹீரோயினின் நக்கல், நையாண்டி, இத்யாதி எல்லாம். சிந்து வாங்கிக் கொடுத்த
புது டிரஸ்சை ஆசை ஆசையாக உதயாவை போட சொல்லி வற்புறுத்தும் அம்மா கலைராணி,
அது பெண்கள் அணிகிற டிரஸ் என்பது தெரிந்ததும் சுருங்கி போவது ஏழைகளுக்கே
உரிய இயலாமை.
உதயாவுக்கு
அதிகம் வேலையில்லை. எந்நேரமும் கவலையோடு இருந்தால் போதும் என்று
சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. சிரிக்கிற காட்சியிலும், சிம்னி
விளக்கு மாதிரியே அமுங்கிக் கிடக்கிறார். ஒரே பாடலில் அண்ணாமலை ரேஞ்சுக்கு
தொழில் அதிபர் ஆவதெல்லாம் ரொம்ப த்ரி மச். இவரது வாழ்வில் சார்மிளா
குறுக்கிடும்போது சிந்து வந்து நிற்பதுதான் படத்தில் நிகழும் திடீர்
திருப்பம்.
பந்து மாதிரி துள்ளுகிறார் சிந்து. தன்னால் ஒரு தாயும், மகனும்
அடைகிற துன்பத்தை கண்டு தன்னையே கொடுக்க முன்வருவது அப்ளாஸ் அடிக்க
வைக்கிறது. ஆனால், அவ்வளவு படித்தவர் போலீசிடம் வாயை திறந்து கூட தனது
காதலர் இவர் அல்ல என்று சொல்லாமல் போனதுதான் ரொம்ப தப்ளாஸ்... கல்யாணமே
கட்டிக்கொள்கிறாராம். பயங்கர டப்பாசு போங்க.
வையாபுரி, பாலாஜி, சாப்ளின் பாலு, ராம்ஜி என்று பழைய பெருங்காய டப்பாக்கள். காட்சியை திறக்கும்போதெல்லாம் காதடைத்து போகிறது. சிற்பியின்
இசையில் தை தை அச்சத்தை என்ற பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளரும் தனது வேலையை கச்சிதாமாக செய்திருக்கிறார்.
படத்தில் வரும் அநேக கேரக்டர்கள் பேச வேண்டிய இடத்தில் ஊமையாகவே இருக்கிறார்கள். படமும்.... |