பஞ்சாமிர்தம்
|
|
தமிழ்சினிமாவுக்கு
பழக்கமான ஆள்மாறாட்ட கதையில், கொஞ்சம் மாயாஜாலத்தை கலந்தால் பஞ்சாமிர்தம்
ரெடி. தொண்டையில் வைத்தால் கரைகிற பஞ்சு மிட்டாய் போல ஜில்லென்று கரைகிறது
இரண்டரை மணிநேரமும். |
இராமாயண
காலத்தில் துவங்குகிறது கதை. 'ஸ்சொய்ய்ய்ங்...' என்று டைவ் அடித்து
பழங்கால சம்பவத்தை நிகழ்காலத்தோடு முடிச்சு போடுகிறார் இயக்குனர் ராஜு
ஈஸ்வரன். எப்படி என்பதை விளக்கி சொல்வதற்கும், விளங்கிக் கொள்வதற்கும்
அதிக கவலை வேண்டாம். ஏனென்றால் இந்த படத்தில் லாஜிக் என்பது கர்சீப்பைவிட
சின்ன சைஸ்தான்!
மாரீசனுக்கும் இடும்பனுக்கும் சண்டை. காதலியை
மாலையாக்கி கழுத்தில் அணிந்து கொள்ளும் மாரீசன், இடும்பனை தண்டையாக்கி
காலில் அணிந்து கொள்கிறான். இராமனை ஏமாற்ற மான் வேடமிடும் மாரீசன் அவன்
கையாலேயே அம்பு பட்டு கல்லாகிறான். சாப விமோசனம் உண்டல்லவா? அதுதான்
கலியுகமான இந்த காலம். நாசரின் எஸ்டேட்டில் வேலை செய்யும் சரண்யா மோகன்,
கெடுபிடியாக வேலைக்காரர்களிடமும் உறவினர்களிடமும் நடந்து கொள்ள, இவரை
மலையுச்சியில் கூலிப்படையினர் உதவியோடு தள்ளிவிடுகிறார்கள். தப்பிக்க
நினைக்கும் இவரது கைபட்டு உயிர்தெழுகிற மாரீசன், சரண்யாவின் கண்களுக்கு
மட்டுமே தெரிகிறார். இவரது உதவியோடு உயிர் தப்பும் சரண்யா, மீண்டும்
எஸ்டேட்டுக்கு வர, அங்கே நாசர் போலவே இன்னொரு நாசர். ஒரிஜனல் நாசரை
கட்டிப் போட்டுவிட்டு உள்ளே நுழைந்த கள்ள நாசர் இவர். இந்த ஆள்மாறாட்ட
குழப்பத்தில் இடையே நுழைந்து கும்மியடிக்கிறான் இடும்பன். சரண்யாவுக்கு
மாரீசனும், நாசருக்கு இடும்பனும் உதவ, பிசி சர்க்காரின் மேஜிக் ஷோவுக்குள்
நுழைந்த சந்தோஷம் சிறுசுகளுக்கும் பெரிசுகளுக்கும்! இளசுகளும் மகிழ்வதற்கு
வசதியாக சரண்யா, அரவிந்த் லவ் டிராக்கும் உண்டு.
இடும்பனை கொன்று, ஒரிஜனல் நாசரை மீட்டு சுபம் போடுகிறார்கள். இடையே வரும் இன்னொரு ட்விஸ்ட், இந்த சரண்யா நாசரின் பேத்தி! மீன்
வாசம் பிடிக்காத நாசரை விட, மீன் பிடிக்கிற நாசர் சூப்பர். திடீர்
பணக்காரனான சந்தோஷத்தில் இவர் ஆடுகிற ஆட்டத்திற்கு தியேட்டரே ஆடுகிறது.
அரவிந்த்-சரண்யா இருவரும் காதலிக்கிறார்களா, இல்லையா என்ற குழப்பத்தை
தீர்த்து வைக்கிறது ஒரு டுயட். ஃபிரஷ் ஆப்பிள் போன்ற சரண்யாவுக்கு கொஞ்சம்
அழுத்தமான கேரக்டர்தான் அரவிந்தை விட!
கூலிப்படையாக கருணாஸ்,
கஞ்சா கருப்பு. மலையிலே இருந்து தள்ளிவிடப்பட்ட பெண், வீட்டில் டைனிங்
டேபிளில் உட்கார்ந்திருப்பது அதிர்ச்சி என்றால், காலே இல்லாமல் நடந்து
போவது இன்னொரு அதிர்ச்சி. எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, இளவரசு கூட்டணி
கிச்சுகிச்சு முட்டுகிறார்கள். இடும்பனாக படத்தின் இயக்குனர் ராஜு ஈஸ்வரனே
நடித்திருக்கிறார். சரித்திர கால முகம். கொஞ்சம் முயற்சித்திருந்தால்
சரித்திரம் பேசும் குழந்தைகள் படத்தையே கொடுத்திருக்கலாம். பாராட்டுக்குரிய லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறது கிராபிக்ஸ்! அடுத்த இடத்தில் இசையமைப்பாளர் சுந்தர்சி பாபு. குழந்தைகளின் ருசியறிந்து குறையில்லாமல் திறந்திருக்கிறார்கள் ஒரு பஞ்சாமிர்த கடையை! | |
Category: திரை விமர்சனம் | Added by: m_linoj (2009-04-26)
|
Views: 773
| Rating: 0.0/0 |