வால்மீகி
டைட்டிலே பாதி கதையை சொல்லியிருக்கும். ஒரு திருடன் திருந்தி மனுஷனாவுற மேட்டர்!
மீதியை தமிழ்சினிமாவின் வழக்கமான சம்பவங்கள் நகர்த்தி செல்ல, சற்றே ஆறிப்போன வால்மீகி தயார்!
பிக்பாக்கெட்
திருடன் அகில், ஒரு பைத்தியத்திடமிருந்து மீராநந்தனின் உயிரை
காப்பாற்றுகிறார். காதல் வரணுமே? வந்திருச்சு பொண்ணுக்கு. அவன்
பிக்பாக்கெட் என்பது முக்கால் மனசு பறி போன பிறகு தெரிய, மீதி இருக்கிற
கால் மனசோடு கவலைப்படுகிறார். அவனை திருத்தியே தீருவேன் என்று கங்கணம்
கட்ட, யானைக்கு கோவணம் கட்றது ஈசியா என்ன? அகில் புத்தி அறுப்பு
போடுவதிலேயே குறியாக இருக்கிறது. "பறி கொடுத்தவனோட வாழ்க்கையை கொஞ்சம்
திரும்பி பாரு"ன்னு கேட்டு கேட்டு அலுத்துப்போன மீரா நந்தன், மொத்த
கூட்டத்தையும் பிடித்து போலீசில் கொடுக்கிறார். இதற்கிடையில் தன்னால்
வாழ்க்கையை பறிகொடுத்துவிட்டு விபச்சாரியான ஒருத்தியை பார்த்த பிறகுதான்
புத்தியில் சுத்தியல் விழுகிறது அகிலுக்கு. வேலைக்கு போயிருப்பாரே?
அதுதான் இல்லை. நாலு நாள் சாப்பிடாமல் பாலத்துக்கு கீழே பம்மி
கிடக்கிறார். "போ... வேலைக்கு போ"ன்னு துரத்துற மீராவுக்கு எதிரே, ஒரு
காரை லேசாக துடைக்க, டிப்ஸ் இரண்டு பத்து ரூபாய். ஆ.... உழைச்சாச்சு.
சந்தோஷத்திலே தியேட்டரே கைதட்ட, அந்த சந்தோஷத்துக்கும் ஆப்பு வைக்கிறார்
இயக்குனர். மீரா நந்தன் அவுட்!
கதையே அழுக்கின் பின்னணி
என்பதால், மருந்துக்கு கூட மனசை ரம்மியமாக்கவில்லை பெரும்பாலான முகங்கள்.
அந்த பூக்கார தேவிகாவும், புது பூ மீரா நந்தனும் தவிர. அஜயன் பாலாவின்
நடிப்பில் சேரி வாசனை செமத்தியாக வீசுகிறது. இவரே இன்னொரு வீட்டில் தண்ட
சோறு. இந்த லட்சணத்தில் இன்னொரு பிக்பாக்கெட்டையும் வீட்டுக்குள்
சேர்க்கிறாராம். என்னய்யா லாஜிக்?
அகில், ஆறடி கருப்பில் அலட்டல்
இல்லாத நடிப்பு. ரொம்ப சீக்கிரம் பழகியிருக்கிறார் சென்னை தமிழுக்கு.
போலீஸ் ஸ்டேஷன் புதுசில்லை என்பதே அவரது பாடி லாங்குவேஜ் அற்புதமாக
உணர்த்திவிடுகிறது. "உங்களை பற்றி சொல்லுங்க?" என்று மீரா நந்தன் கேட்க,
"ஐஞ்சரை அடி, மாநிறம், கழுத்துக்கு கீழே மச்சம்"னு குற்றப்பத்திரிகை
வாசிக்கிறாரே, அங்க தலை காட்டுறார் டைரக்டர்.
மீரா நந்தன் சில
கோணங்களில் மட்டும் அழகு. நடிப்பில் இன்னொரு மீராஜாஸ்மினாக ஜொலிக்கிறார்.
"ஆறு வயசிலேயே திருட்டை பார்த்தவ நான்" என்று அவர் சாதாரணமாக சொல்ல, அந்த
பிளாஷ்பேக்... கொடூரம் சாமி. ஒரு செயின் ஓராயிரம் நினைவலைகளை கிளறி
விடுகிற கதைகளைதான் ஓராயிரம் முறை பார்த்தாச்சே? அந்த ஒலிக்கிற டாலருக்கு
அவர் பேட்டரி போடுகிற காட்சியெல்லாம் வேஸ்ட் வாத்தியாருங்களா...
படவா கோபி என்ற டைட்டில் கார்டை பார்த்து சிரிக்க காத்திருந்தால், அந்த நம்பிக்கையையும் பிக்பாக்கெட் அடிக்கிறார்கள்.
இரண்டாவது
நாயகியான தேவிகா, நல்ல ஆறுதல். யதார்த்தத்தை உணருகிற அவரது காதல்
அப்ளாஸ்களுக்குரியது. ஒரு திருடனோட பணம் தேவையில்லை என்று மூட்டையாக கட்டி
அகில் முகத்தில் எறிகிற தில், வெல்! மீராவிடம் வளரும் அந்த சிறுவன்
நடிப்பு பளிச். ஆண் போலவே பிக்பாக்கெட் கூட்டத்தில் பலே கைகாரியாக
உலாவரும் அந்த ஒல்லிப்பெண் கவர்கிறாள்(ன்). பிக்பாக்கெட் கூட்டத்தின்
தலைவியாக வரும் அந்த குண்டு பொம்பளையும் அதிர வைக்கிறார். ஆடிக்கொண்டே
வந்து கழுத்து செயினை கழற்றி போடும் இவர்களின் அன்பு, சேரிகளுக்கு மட்டுமே
சாத்தியம். பல காட்சிகளில் இரவின் அமைதியை உள்வாங்கிக் கொண்டிருக்கிற
அழகப்பனின் கேமிராவிலும் வெளிச்சம்.
ஞானிகள்
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்தான். இருந்தாலும், பொறுக்க முடியாமல்
புலம்ப வேண்டியிருக்கிறது. பாட்டு சீன் வந்திரப்போகுதோ என்று பதற
வைக்கிறார் இளையராஜா.
பிக்பாக்கெட் அடிப்பதை நேரடியாக பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் இறங்கிவிடுங்கள் என்ற நீதியை புகட்ட, எத்தனை கோடிகள் செலவு? |
Category: திரை விமர்சனம் | Added by: linoj (2009-07-02)
|
Views: 1043
| Rating: 0.0/0 |