நியூட்டனின் மூன்றாம் விதி
|
|
முதல்
இருபது நிமிடங்கள் 'விதியே' என்று நகர்கிறது! அதன்பின் திரைக்கதை என்ற
முரட்டுப்பிடிக்குள் மொத்த தியேட்டரையும் வளைத்துப் பிடிக்கிறார்
இயக்குனர் தாய் முத்துச் செல்வன். |
'ஒவ்வொரு
விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை இருக்கும்' என்ற நியூட்டனின்
தத்துவத்தை ஒரு கதைக்குள் திணித்து அவர் காட்டியிருக்கும் வித்தையில்
ஓராயிரம் விறுவிறுப்பு. பீட்சா கார்னரில் வேலை பார்க்கும்
எஸ்.ஜே.சூர்யாவுக்கும், ஷயாலிக்கும் லவ். அது எப்படி உருவாச்சு என்பதை
விடவும், அது ஏன் நிறைவேறாமல் போச்சு என்பதை இதயம் நொறுங்க
சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
காதலியை
இழந்து தவிக்கும் சூர்யா, அதற்கு காரணமான விவிஐபி யின் கதையை எண்ணி இரண்டே
மணி நேரத்தில் முடிக்கிறார். அதுவும் டெலிபோனில் அழைத்து 'உன் உயிர்
இன்னும் இரண்டு மணி நேரம்தான்' என்று அறிவித்துவிட்டு! எப்படியும்
இறுதி வெற்றி ஹீரோவுக்குதான் என்று மனசு சொன்னாலும், என்னாகுமோ என்ற
தவிப்பை அனுபவிக்கிறது உடம்பின் அத்தனை செல்களும்! அதுதான் இந்த படத்தின்
வெற்றியாகவும் இருக்கக் கூடும். ஒரு விஞ்ஞானி போல கொலைக்கான திட்டம்
வகுக்கிற சூர்யாவின் முகத்தில், வெறுப்பும் வேதனையும், பழி வாங்கும்
உணர்ச்சியும் அசால்டாக உட்கார்ந்து கொள்கிறது. பழிவாங்குகிற ஸ்டைலும்
அலாதி சுவாரஸ்யம்.
வில்லன்
ராஜீவ் கிருஷ்ணாவின் கள்ளத் தொடர்பை அம்பலப்படுத்துவது, பார்க்கிங்
செய்யப்பட்ட காரில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை இன்கம்டாக்சை விட்டு
அள்ள வைப்பது, சப்போர்ட்டுக்கு வரும் மினிஸ்டரை ஆஃப் பண்ணுவது என்று
ரகளையடிக்கிறார். பருந்து என்று நினைத்து பரவசப்படுகிற நேரம் பார்த்து,
கோழிக்குஞ்சை போல வில்லனின் கைகளில் சிக்கிக் கொள்கிறார். இறுதி
நிமிடங்கள் எலாஸ்டிக்காக நீள்கிறது. முடிவு...? நாம் எதிர்பார்த்ததுதான்!
கோடம்பாக்கத்து
குதிரை சந்தையில் மற்றுமொரு குதிரையாக ஷாயாலி. நல்லவேளை, நடிக்க தெரிந்த
குதிரை. முடிவு? பரிதாபம்! அலர வைக்கிறார் ராஜீவ் கிருஷ்ணா. ஆஹா படத்தில்
வந்த அப்பாவியா இது? உயிரை எடுப்பதை மல்லாக்கொட்டை உடைப்பது மாதிரி சுலபமாக கையாளும் இவர், தமிழ் சினிமாவின் 'கோர' மென்ட்டல் எக்ஸ்பிரஸ்!
அழுத்தமான பிளாஷ்பேக். ஆனால், விறுவிறுப்பான கதையின் வேகத்தை குறைக்கிறதே?
பின்னணி
இசையில் காட்டிய அக்கறையை பாடல்களில் காட்டவில்லையோ? ஆனாலும்
இசையமைப்பாளர் வினய்க்கு ஒரு க்ரீன் சிக்னல் போடலாம். சரவணனின் ஒளிப்பதிவு
நம்மையும் கை பிடித்து அழைத்துச் செல்கிறது.
ரசிகர்களின் மதியை விதியால் வென்றிருக்கிறார்கள்! | |
Category: திரை விமர்சனம் | Added by: m_linoj (2009-05-16)
|
Views: 1193
| Rating: 0.0/0 |