சேவைகள் |
CATEGORIES | ||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » ஆங்கிலம் கற்க » ஆங்கிலம் ஆக்கங்கள் | [ Add new entry ] |
ஆங்கிலம் மொழி வரலாறு (History of the English language in Tamil)
ஆங்கிலம் கற்கும் நாம் ஆங்கில மொழியின் வரலாற்றையும் அறிந்து
வைத்துக்கொள்வது நல்லதல்லவா? ஆங்கிலம் மொழியின் வரலாற்றை அறிந்துக்கொள்ள
வேண்டுமாயின் நாம் ஆங்கிலேயரின் வரலாற்றையும், அவர்களது மொழிப்
பற்றையும்,ஆங்கில மொழி உலகளவில் பரவிய விதத்தையும் அறிந்துக்கொள்ளவேண்டும். ஆங்கில மொழி இங்கிலாந்தில் தோன்றிய ஒரு மொழியாகும். இது யேர்மனிய மொழி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். யேர்மனிய மொழிக் குடும்பம் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்ததாகும். ஆனாலும் ஆங்கிலம் பல மொழிகளினதும் கலப்பு மொழியாகும். இன்று உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளான சீனம், ஸ்பானிஷ் மொழிகளுக்கு அடுத்தப்படியாக அதிகம் பேசப்படும் மொழி ஆங்கிலமாகும். 2007 ஆம் ஆண்டின் கணிப்பின் படி ஆங்கில மொழியை தாய்மொழியாகக் கொண்டோரின் எண்ணிக்கை 400 மில்லியன் மக்களாகும். உலகளவில் ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கை 1.8 பில்லியன் மக்களாகும். இவ்வெண்ணிக்கை உலக மக்கள் தொகையில் மூன்றின் ஒன்றாகும். இன்று ஆங்கிலம் 53 நாடுகளில் ஆட்சி மொழியாகவும் இருக்கின்றது. இனி இம்மொழியின் வரலாற்றைப் பார்ப்போம். உரோமர் ஆட்சிக் காலம் (இலத்தீன் - செல்டிக்) கி.மு 43 இல் உரோமானியர் (தற்போதைய இத்தாலி) படையெடுத்து வந்து பிரித்தானியாவை கைப்பற்றினர். பிரித்தானியா உரோமப் பேரரசின் ஓர் ஆட்சிப் பகுதியானது. உரோமர்கள் பிரித்தானியாவைக் கைப்பற்றும் போது பிரித்தானியாவின் பூர்வீகக் குடிகள் “செல்டிக்” எனும் மொழியைப் பேசினர். உரோமானியர்கள் பேசிய மொழி இலத்தீன் மொழியாகும். உரோமானியர்களின் இவ்வருகை பிரித்தானியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டது எனலாம். அவர்களாலேயே பொதுக் கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், வீதி புனரமைப்பு திட்டங்கள் போன்றன உருவாக்கப்பட்டன. அவற்றின் எச்சங்கள் இன்றும் இதற்கு சான்று பகிர்கின்றன. உரோமானியர்கள் ஆட்சிக் காலத்தில் அரச நிர்வாகம், நீதி, சட்டம், மருத்துவக் கல்வி போன்றன இலத்தீன் மொழி வழியாகவே இருந்தது. கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்கு மேல் பிரித்தானியாவை தம் வசம் வைத்திருந்த உரோமானியர்கள் கி.பி 436 இல் தாயகம் திரும்பினர். பழைய ஆங்கிலம் (Old English [450 - 1100 AD]) கி.பி 449 இல் உரோமானியர்களின் வெளியேற்றத்தின் பின் பிரித்தானியாவின் அரச ஆட்சி மற்றும் படைவலு நிலை பலவீனமாகியது. இந்நிலையறிந்த மூன்று யேர்மனிய மொழிக் குடும்பத்தினர் (ஏங்லோ, செக்சோன், யூட்) பாய்மரக் கப்பல்களில் வட கடலூடாக வந்து பிரித்தானியாவைத் தாக்கி கைப்பற்றினர். இம்மூன்று யேர்மனிய மொழிக் குடும்பத்தினர்களான “செக்சோன்” (இன்றைய) யேர்மனியிலிருந்தும், “ஏங்லோ” (இன்றைய) தென் டென்மார்க்கிலிருந்தும், “யூட்” இனத்தவர்கள் யூட்லாந்திலிருந்தும் வந்தனர். பொதுவாக இவர்களை ஏங்லோ-செக்சோன் என்றே அழைக்கப்படுகின்றனர். இவர்களே ஆங்கிலம் எனும் மொழியை தோற்றுவித்தவர்கள் ஆவர். இவர்களது நில ஆக்கிரமிப்பின் போது பிரித்தானியாவின் பூர்வீகக் குடிகளான “செல்டிக்” மொழி பேசும் செல்டிக் இன மக்கள் பிரித்தானியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு நகர்ந்தப்பட்டனர். (அதாவது இன்றைய வேல்சு மற்றும் ஸ்கொத்லாந்து பகுதிகள்) ஏங்லோ-செக்சோன் கட்டுப்பாட்டுக்குள் வீழ்ந்த பிரித்தானியாவை ஏழு அரசப் பிரிவுகளாக பிரித்து ஆட்சி செய்தனர். ஏங்லோ இனத்தவர்கள் “ஏங்லோ-லாந்து” எனும் பகுதியில் இருந்தே வந்தனர். இவர்கள் பேசிய மொழி "இங்கிலிக்" எனும் யேர்மனிய மொழியாகும். இப்பெயர்களே இன்று மருவி இங்கிலாந்து - இங்கிலிஸ் என்றானது. இம்மூன்று மொழிக் குடும்பத்தினரும் பேசியது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மொழிகள் என்பது மொழிவல்லுநர்களின் கருத்து. இம்மொழிகளில் இருந்து வளர்ச்சிப் பெற்ற மொழியே இன்று "ஆங்கிலம்" என்றழைக்கப்படுகின்றது. இருப்பினும் அக்காலத்தில் பேசப்பட்ட ஆங்கிலத்தின் உச்சரிப்பு மற்றும் பேச்சு வழக்கு இன்றைய ஆங்கிலத்தையும் விட அதிகளவில் வேறுப்பட்டது. அந்த ஆங்கிலத்தை இன்றைய தாய்மொழி ஆங்கிலேயர்களுக்கே புரிந்துக்கொள்ள முடியாதுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் அதனை "பழைய ஆங்கிலம்" என்கின்றனர். எப்படியோ இப்பழைய ஆங்கிலத்தின் மூலச் சொற்களில் இருந்தே இன்றைய நவீன ஆங்கிலத்தின் பாதி சொற்கள் அமையப்பட்டுள்ளதாக் கூறப்படுகின்றது. பழைய ஆங்கிலம் கி.பி.1100 வரை பேசப்பட்டது. மத்திய ஆங்கிலம் (Middle English [1100 - 1500]) கி.பி. 1066 நோமண்டியின் (தற்போதைய பிரான்ஸ்) கோமகனான வெற்றி வீரர் வில்லியம் படையெடுத்து வந்து இங்கிலாந்தை வெற்றிக்கொண்டார். இவர்கள் ஒரு விதமான பிரஞ்சு மொழி பேசினர். இதை "நோர்மன்" மொழி என்றும் அழைக்கப்படுகின்றது. வெற்றி வீரர் வில்லியத்தின் ஆட்சியில் பிரஞ்சு மொழியே அரச நிர்வாக மொழியாகப் பிரித்தானியாவில் திகழ்ந்தது. நீதி நிர்வாகத் துறையிலும், சட்டத் திட்டங்களிலும், வர்த்தக முறைகளிலும் பிரஞ்சு மொழியே ஆதிக்க மொழியாய் இருந்தது. இக்காலக் கட்டத்தில் மொழித் தொடர்பில் ஒரு வர்க்கப் பிரிவு உருவானது. அரச அதிகாரங்களில் பிரஞ்சு மொழியினரே அதிகம் இருந்ததனர். அதனால் உயர் பதவி வகித்தோர், கற்றோர் என மேல் தட்டு மக்கள் பிரஞ்சு மொழியையும், கீழ் தட்டு மக்கள் ஆங்கிலத்தையும் பேசினர். ஆனால் கி.பி. 14 ஆம் நூற்றாண்டளவில் ஆங்கில தாய் மொழி பற்றாளர்கள் மேற்கொண்ட கடும் முயற்சியால் ஆங்கிலம் அதிகார மொழியாக உருவெடுத்தது. ஆனால் நிறைய பிரஞ்சு மொழி சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டது. இந்த ஆங்கிலத்தையே "மத்திய ஆங்கிலம்" என்று அழைக்கப்படுகின்றது. கி.பி 1348 இல் இலத்தீன் மொழிவழி இருந்த பாடசாலை கல்வி முறைமை ஆங்கில வழி கல்வியாக மாறியது. அதிக பாடசாலைகளில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்படத் தொடங்கியது. கி.பி 1362 வரை பிரஞ்சு மொழியிலேயே இருந்த நீதி, சட்டம் போன்றன ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டது. இவ்வாண்டே முதன் முதல் ஆங்கிலம் பாராளுமன்றத்தில் அறியனையேறிய ஆண்டாகும். கி.பி. 1388 இல் புகழ் பெற்ற கியோபிறே சாவுசர் [Geoffrey Chaucer] எனும் எழுத்தாளர் ஆங்கிலத்தில் “The Canterbury Tales” எனும் முதல் கதை தொகுப்பை எழுதினார். அதனைத் தொடர்ந்து கியோபிறே சாவுசரின் பல ஆக்கங்கள் ஆங்கிலத்தில் வெளிவரத் தொடங்கின. கியோபிறே சாவிசரின் இவ்வாக்கங்கள் இன்றைய ஆங்கிலேயர்களாலும் வாசித்தறிய முடியாத அளவிற்கு கடினமானது எனக் கூறப்படுகின்றது. இன்றைய எழுத்து நடைக்கும் அன்றைய எழுத்து நடைக்கும் பாரிய வேறுப்பாடு இருப்பதாகக் கூறுகின்றனர். நவீன ஆங்கிலம் Modern English நவீன ஆங்கிலத்தை 1500 – 1800 வரை பேசப்பட்டதை "முன்னைய நவீன ஆங்கிலம்" என்றும், 1800 இலிருந்து தற்போது வரைப் பேசப்படுவதை "பின்னைய நவீன ஆங்கிலம்" என்றும் வரையறுத்துள்ளனர். முன்னைய நவீன ஆங்கிலம் (Early Modern English [1500-1800]) மத்திய ஆங்கிலம் பேசப்பட்ட காலத்தின் இறுதியில் ஆங்கில மொழி உச்சரிப்புகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. எழுத்திலக்கணத்திலும் ஒலிப்புகளிலும் திடீர் மாற்றம் ஏற்பட்டது. பதினாறாம் நூற்றாண்டுகளில் ஆங்கில மொழியை பலத் துறைகளிலும் பயன்படுத்த வேண்டும் எனும் எண்ணம் ஆங்கில மொழி பற்றாளர்களிடையே தலைத்தூக்கியது. அச்சு இயந்திரத்தின் தோற்றம் இதற்கு பெரும் உறுதுணைப் புரிந்தது. மற்றும் மத சீர்த்திருத்தம், புதியப் புதியக் கண்டுப்பிடிப்புகள், பண்டைய இலக்கியங்களில் ஏற்பட்ட புது மோகம், மறுமலர்ச்சி இயக்கம் போன்றனவும் இதற்கு துணைப் புரிந்தது. இலத்தீன், பிரஞ்சு போன்ற மொழிகள் அறிவியல் மொழிகள் என்றும், ஆங்கிலம் பண்படாத மொழியெனும் தாழ்வானக் கருத்து பலரிடையே நிலவியதால், ஆங்கில மொழியை சகல விதத்திலும் முதன்மைப் படுத்த வேண்டும் எனும் எண்ணக்கரு ஆங்கில அறிவியலாளர்களிடையே மேலோங்கியது. நடைமுறைக்கு அத்தியாவசியமான அறிவை பாமர மக்களும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு மொழியின் வளர்ச்சிக்கு அம்மொழியினரின் வாசிப்புத் திறன் மிக அவசியம் என்பதை உணர்ந்தனர். எனவே பாமரர்களும் பயன்பெறும் வகையில் பொத்தகங்கள் மலிவு விலையில் வெளியிடப்பட்டன. விஞ்ஞான நூல்கள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டது. அதுவரைக் காலமும் இலத்தீன் மொழியிலேயே இருந்து வந்த மருத்துவக் கல்வி நூல்களும் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டது. மருத்துவக் கல்வியும் ஆங்கிலமானது. கத்தோலிக்க விவலிய நூல் இக்காலப்பகுதியிலேயே முதன் முறையாக ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டது. 1564 இல் உலகப் புகழ்ப்பெற்ற நாடக ஆசிரியரும் எழுத்தாளருமான வில்லியம் சேக்ஸ்பியர் பிறந்தார். (William Shakespeare [1564 - 1616]) இவர் தனது தன்னிகரில்லா சிந்தனையாலும் சேவையாலும் ஆங்கில மொழி உலகில் தடம் பதித்தார். பல்லாயிரக் கணக்கான புதிய சொற்களை சேக்சுபியர் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்தார். இவற்றை சேக்சுபியரின் ஆங்கிலம் எனக் கூறுவோரும் உள்ளனர். இலக்கண வளமிக்க மொழி எனும் தகுதி ஆங்கில மொழிக்கு ஏற்பட வேண்டுமாயின் ஆங்கில இலக்கண நூல்கள், அகராதிகளும் ஆங்கில மொழியில் பெருக வேண்டும் எனப் பலரும் சுட்டினர். 1604 இல் அகர வரிசையில் அமைந்த உலகில் முதல் ஆங்கில அகரமுதலி பிரசுரமானது. 1702 இல் முதல் ஆங்கில நாளிதழ் "The Daily Courant" இலண்டனில் வெளியானது. 1755 இல் சாமுவேல் யோன்சனின் ஆங்கில அகராதி பிரசுரமானது. 1776 இல் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக இருந்த அமெரிக்கா சுதந்திரப் பிரகடனம் செய்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசாட்சியில் ஏற்பட்ட மாற்றத்தால் அமெரிக்க ஆங்கிலப் பேச்சு வழக்கிலும் ஒலிப்புகளிலும் மாற்றங்கள் நிகழத்தொடங்கின. தற்போதைய நவீன ஆங்கிலம் (Late Modern English [1800- Present]) முன்னைய நவீன ஆங்கிலத்திற்கும் தற்போதைய நவீன ஆங்கிலத்திற்கும் இடையிலான வேறுப்பாடு சொற்களஞ்சியத்தின் எண்ணிக்கையாகும். தற்போதைய நவீன ஆங்கிலத்தில் சொல்வளம் பெருகியுள்ளது. உலகின் பல்வேறு மொழிகளின் சொற்களை ஆங்கிலம் தன்னகத்தே உள்வாங்கிக்கொண்டு தன் சொல் வளத்தைப் பெருக்கிக்கொண்டது. இதன் வளர்ச்சிக்கான பிரதானக் காரணிகளாக இரண்டைக் கூறலாம். முதலாவது கைத் தொழில் புரட்சி, இயந்திர சாதனக் கண்டுப்பிடிப்புகள், மருத்துவத் துறை வளர்ச்சி, தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு, விஞ்ஞான வளர்ச்சி போன்றன பல புதிய புதியச் சொற்களை ஆங்கிலத்திற்கு வழங்கியது. இரண்டாவது காரணி உலகின் பலப்பாகங்கள் பிரித்தானியரின் ஆளுகைக்குள் உற்பட்டிருந்ததால் பல்தேசங்களுடன் வைத்திருந்த பல்வேறு தொடர்புகளால் எண்ணற்ற பிறமொழி சொற்களையும் ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டது. ஒரு கணக்கெடுக்கின் படி 146 மொழிகளில் இருந்து சொற்களை ஆங்கிலம் கடன் வாங்கியுள்ளது. தமிழிலிருந்து ஆங்கிலம் பெற்றுக்கொண்டச் சொற்களில் சில. எனகொண்டா - Anaconda காசு - Cash கட்டுமரம் - Catamaran கறி - Curry மாங்காய் - Mango பறை - Pariah பப்படம் - Popppadam அரிசி - Rice இன்னும் நிறைய சொற்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகின்றது. அநேகமான மூலிகைகளின் பெயர்கள் தமிழில் இருந்தே ஆங்கிலத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு ஆங்கிலத்தைப் பொறுத்தமட்டில் பிறமொழிச்சொற்களை கடன் வாங்கும் திறந்த மனப்போக்கு, அதன் துரித வளர்ச்சிக்கு உதவியுள்ளன என்பது தெளிவாகிறது. மேலும் ஆங்கில தொழில் நுட்பச் சொற்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. இதன் உணர்தலால் உலகில் ஆங்கிலம் கற்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இன்று ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாக வியாபித்து நிற்கின்றது. அமெரிக்க விஞ்ஞான வளர்ச்சி மற்றும் இணைய தொழில் நுட்பம் போன்றவைகளும் இதன் வளர்ச்சியின் இன்னுமொரு அங்கமாகியுள்ளது. ஒவ்வொரு நாளும் புது புதுச் சொற்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. எதிர்வரும் ஆண்டு 2009 இல் பத்து இலட்சம் சொற்கள் கொண்ட ஒரு மொழி எனும் தகுதியை ஆங்கிலம் பெற்றுவிடும் என செய்திகள் கூறுகின்றன. கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம் சேக்ஸ்பியரின் காலத்தில் 5 முதல் 7 மில்லியன் மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்பட்ட ஆங்கில மொழி; இன்று உலகளவில் அறிவியல், அரசியல், வணிகம், தொழில்நுட்பம், திரைப்படம், ஊடகம் என சகல துறைகளிலும் பிரகாசிக்கும் ஒரு மொழியாக வளர்ந்து நிற்கின்றது. இன்னும் எழுதப்போனால் ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றையே எழுத வேண்டியதாக இருக்கும். இக்கட்டுரை "ஆங்கில மொழி வரலாறு" தொடர்பில் மட்டுமே எழுதப்பட்டதால் இத்துடன் நிறைவு செய்கின்றேன். பிரித்தானிய ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையில் என்ன வேறுப்பாடு என்று அறிந்துக்கொள்ளவேண்டுமா? "அமெரிக்க ஆங்கில வரலாறு" பாருங்கள். | |
Views: 1992 | |
Total comments: 0 | |