இணையத்தில் தமிழின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தமிழ் வலைப்பதிவுகள் (Blogs) மற்றும் தமிழ் இணைய வார இதழ்களும் தோன்றி நிறைய பிரபலமாகிக் கொண்டு வருகின்றன (திண்ணை, தமிழ் சிஃபி போன்றவை). தவிர, அநேகமாக எல்லா தமிழ் தினசரி மற்றும் வார இதழ்களும் தங்கள் இணையைப் பதிப்புகளை உலவ விட்டிருக்கின்றன. தினமலர், தினமணி போன்ற தினசரிகள், குமுதம் குழும இதழ்கள் போன்றவற்றை இலவசமாகவும், விகடன் போன்றவை பர்ஸைத் திறக்கச் சொல்லியும் தங்கள் முழு அச்சு இதழ்களுடன் கூடவே, அவ்வப்போது நம் நாட்டிலும், உலகிலும் நிகழும் செய்திகளையும் உடனுக்குடன் இணையத்தின் மூலம் தருகின்றன.
ஆனால் அனைத்துல தரக் கட்டுப்பட்டு மையத்தால் (ISO) இற்றைப் படுத்தப்பட்ட ஒருங்குறி என்றழைக்கப்படும் யூனிகோடு முறை பெருமளவு பயன்பாட்டில் இருக்கின்ற போதிலும், பல இணைய இதழ்கள் வெவ்வேறு விதமான எழுத்துருக்களை (font) பாவிக்கின்றன. இதனால் பயனர்களுக்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன. தமிழக அரசும் TAM99 என்னும் யூனிசோடு முறையை பரிந்துரைக்கிறது. சீக்கிறமே எல்லா இணையப் பதிப்புக்களும் ஒரே வரையறைக்குள் வருவார்கள் என்பது திண்ணம்.
இங்கே நான் எழுதியுள்ள கருத்துக்களுக்கு எதிர்வினையாக ஏதேனும் மறுமொழிகளை (Comments) இட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால், "தமிழில் எப்படி அச்சடிப்பது, கீ போர்டு (விசைப்பலகை) ஆங்கிலத்திலல்லவா உள்ள்ளது" என்ற ஐயம் உங்கள் மனத்தில் எழுவதாக வைத்துக் கொள்வோம். அந்நிலையில் உங்களுக்கு உள்ள ஒரே தீர்வு, தமிழில் அச்சடிக்க உதவும் விசைபலகையையும், எழுத்துருக்களையும் அவை கிடைக்கும் சில வலைத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து, உங்கள் கணினியில் நிறுவி, பின்னர் அதனைப் பயன்படுத்துவதுதான். ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமா? அலுவலகக் கணினி, இன்னொருவருக்குச் சொந்தமான கணினி, வெளியே இருக்கும் இண்டெர்னெட் மையங்கள் - இதுபோன்ற சூழலில் அத்தகைய செயல்பாடு வேலைக்காகுமா?
ஆம். இது பிரச்னைதான்! இதனை எப்படித் தீர்ப்பது?ஆம். கூகிள் (Google) இப்போது Transliteration in Tamil முறைப்படி தமிழில் தட்டச்சு செய்ய அவர்களின் தளத்தில் வசதி செய்திருக்கிறார்கள். இந்தத் தளத்திற்குச் சென்று "தமிங்கிலீஷில்" அடித்தால் தமிழில் தெரியும். எல்லாம் அடித்தபின், அதனை மின்வருடி, நகலெடுத்து, என் கருத்துப் பெட்டியில் இட்டால் (copy and paste) முடிந்தது வேலை!
அந்தத் தளத்தில் அந்த சேவையை எங்ஙனம் பயன் படுத்துவது என்பதைப் பற்றி விரிவான செயல் விளக்கம் அளித்துள்ளார்கள்.
உதாரணத்திற்கு, "அம்மா" என்ற சொல்லுக்கு, முதலில் "Ctrl+G" அழுத்தி தமிழை தெரிவு செய்தபின், "ammA" அல்லது "ammaa" என்று தட்டச்சு செய்து பின்னர் "ஸ்பேஸ்" பாரை அழுத்தினால் "அம்மா" வருவாள்! ஏதாவது கால், கீல் நொண்டியானால் அந்த சொல்லின் மேல் கிளிக்கினால் கால், கையெல்லாம் கிட்டும்!
புகுந்து விளையாடுங்கள் அன்பர்களே!!